Home நாடு “தாய் மொழிப் பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்” – சேவியர் ஜெயகுமார் அறிக்கை

“தாய் மொழிப் பள்ளிகளை மூடச் சொல்பவர்கள் தேசப் பற்று அற்றவர்கள்” – சேவியர் ஜெயகுமார் அறிக்கை

529
0
SHARE
Ad

Xavier-Jeyakumar-Sliderமே 17 – “கல்வி இலாகாவின் முன்னாள்  இயக்குனரான  டான்ஸ்ரீ  அப்துல் ராஹ்மான் அர்ஷாட், தாய் மொழிப் பள்ளிகளின்  மீது வெளியிட்டுள்ள  கருத்துக்குப் பாரிசான் அரசு, அவரைத் தண்டிக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் (படம்).

“நாடு  அவருக்கு வழங்கியுள்ள வாழ்வுக்கும், வாய்ப்புக்கும் நாட்டுக்குச் சிறந்த சேவையாற்றக் கடமை பட்டுள்ள அவரைப் போன்ற பல மலாய்க்கார அறிஞர்கள், தாங்கள் அம்னோவிற்கு மட்டுமே கடமைப்பட்டுள்ளதாக எண்ணுகிறார்கள். தேசப் பற்று அற்றவர்களாக இருப்பதுடன், இனத் துவேசக் கருத்துகளையும் அள்ளி வீசுகின்றனர், ஏன் அவர்களை அரசாங்கம் தண்டிக்கக்கூடாது என்பதே, இன்றைய கேள்வி?” என்றும் பத்திரிக்கைகளுக்கு விடுத்த அறிக்கையொன்றில் சேவியர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தனது அறிக்கையில் சேவியர் ஜெயகுமார் மேலும் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:-

“இந்தத் தேர்தலில் பாரிசானுக்கு ஏற்பட்ட தோல்வி இன வேற்றுமையால் ஏற்பட்ட தோல்வியல்ல என்பதனை டான்ஸ்ரீ  அப்துல் ராஹ்மான் அர்ஷாட் போன்றவர்கள் – மலாய்க்கார அறிஞர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் உணரத் தவறியுள்ளது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரிய இடராகும்; மதி நுட்பமற்றவர்களின் கையில் ஒரு சமுதாயத்தின் தலைவிதி மாட்டிக் கொண்டு இருப்பதை இது நமக்கு உணர்த்துகிறது.”

பாஸ் கட்சியை ஒதுக்கி வைத்த தேசிய முன்னணி

“கடந்த 50 ஆண்டுகளாகப் பாரிசான், பாஸ் கட்சியினரை மத இனத் தீவிர வாத இயக்கமாகப் பறைசாற்றி மலேசிய இந்திய, சீன இனங்களிடமிருந்து அந்தக் கட்சியைச் சார்ந்த மலாய்க்காரர்களை ஒதுக்கி வைத்திருந்த பொழுது நாட்டில் இனவாதம் ஓங்கி நிற்பது அம்னோ தலைவர்களுக்கும், சில மலாய்க்கார மேதாவிகளுக்குத் தெரியவில்லை.”

“ஆனால், வளம் மிக்க ஒரு நாடு திவாலாகும் சூழ்நிலையில் இருக்கிறது, நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட் முறையற்ற ரீதியில், வெளியாகிறது, மக்கள் தேவைக்கு, நாட்டு மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டிய நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட் இலஞ்சமாக, கணக்கில்  வராத நிதியாக மறைந்து விடுகிறது என்பதனை  அன்னிய நிதி நிறுவனங்கள் மலேசியர்களுக்கு உணர்த்த வேண்டியுள்ளது.”

“அதனைக் கண்டுபிடித்துத் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறும் ஒரு  அரசாங்கத்தைப் பதவி நீக்கம் செய்ய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையைச் சீனர்களும், இந்தியர்களும் கல்வியறிவுள்ள பெரும்பாலான மலேசியர்களும் செய்துள்ள முடிவுக்கு இன வர்ணம் பூசும் டான்ஸ்ரீ  அப்துல் ராஹ்மான் அர்ஷாட் போன்ற மலாய்க்கார அறிஞர்களின் மதி நுட்பம்  மீது கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.”    

மாரா பல்கலைக் கழகத்தின் நிலை

“டான்ஸ்ரீ அப்துல் ரஹ்மான் அர்ஷாட் பணிபுரியும் மாரா தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் 99% சதவீத மாணவர்களை ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக வைத்துக் கொண்டு, அங்கு  வளர்க்கப் படும்  இன வாதத்தைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ், சீனப் பள்ளிகளின் மீது பழியைப் போடலாமா?”

“இவர் கல்வி இலாகாவின் இயக்குனராகப் பணி புரிந்த பொழுது, கல்வி  இலாகாவின் ஆசிரியர்கள் தேர்வுகளும்  மற்றும் பதவி உயர்வுகளில் காட்டிய பாகுபாடுகள் தேசிய  இனப் பாகுப் பாடுகளுக்கு  இட்டுச் சென்றது இவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? தமிழ் , சீனப் பள்ளிகளில் 6 ஆண்டுகள் தாய் மொழியில் கல்வி கற்பிப்பது மாணவர்களிடம் இன வேற்றுமையைத் தோற்றுவிக்குமாஇல்லை, அன்று ஏதோ ஒரு சாராரைத் திருப்தி படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதா?”

“நாட்டில் இன ஒற்றுமைக்குத் தாங்கள் பாடு படுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் மலாய்த் தலைவர்கள் தங்கள் போடும்  வெளி வேஷங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டில் மலாய்க்காரர்கள் தங்களைத்  தனிமைப் படுத்திக் கொள்ளும்  எத்தனையோ வழிமுறைகளால் இனங்களுக்கிடையிலான  இணக்கத்திற்கு ஏற்படாத  பாதகம், தமிழ் சீன மொழி பள்ளிகளினால் ஏற்படப் போவதில்லை

“தேசிய முன்னணி அரசாங்கம் பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவலன் போக்கைக் கைவிட்டு  இப்பேர்பட்ட பேர்வழிகளுக்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட்டுகள் ஒதுக்கும் போக்கை  கைவிட்டு  இன வாதிகள் மீது  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”

-இவ்வாறு டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்..