மே 16 – டெலிகோம் மலேசியா எனப்படும் மலேசிய தொலைத் தொடர்பு நிறுவனம் வழங்கி வரும் பல்வேறு சேவைகளுக்கு சந்தாதாரர்களாக சுமார் 5 இலட்சம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளதாக டெலிகோம் மலேசியா நிறுவனத்தின் உதவித் தலைவர் அசிசி ஏ.ஹாடி தெரிவித்துள்ளார்.
இவர்களில் சுமார் 320,000 நிறுவனங்கள் டெலிகோம் மலேசியாவின் அகண்ட அலைவரிசை சேவையைப் பயன்படுத்தி வருகின்றன. மற்றவை தகவல்,தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகளுக்கு சந்தாதாரர்களாக உள்ளன.
தற்கால வர்த்தக நடைமுறைகளில் தகவல், தொலைத் தொடர்பு தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தை இந்த சிறு, நடுத்தர நிறுவனங்கள் நன்கு உணர்ந்துள்ளதையே இந்த வளர்ச்சி காட்டுவதாகவும் அசிசி கூறியுள்ளார்.
“மலேசியாவில் உள்ள சிறு, நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 640,00 ஆகும். எனவே, இதில் 5 இலட்சம் சந்தாதாரர்கள் என்பது ஏறக்குறைய 80 சதவீதமாகும். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தகவல், தொலைத் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாடுகளை வர்த்தக நிறுவனங்கள் மேலும் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு, அதில் சிறு,நடுத்தர நிறுவனங்கள் எவ்வாறு டெலிகோம் மலேசியா சேவைகளினால் பயன்பெற்றன என்பது குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அசிசி ஹாடி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் விளக்கங்கள் பெற விரும்புவோர், இது போன்ற கருத்தரங்குகளில் பங்கு பெற விரும்புவோர்,www.tm.com.my/sme என்ற இணையத் தள முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு பதிவுக் கட்டணங்கள் எதுவுமில்லை என்பதும் குறிப்பபிடத்தக்கது.
-பெர்னாமா