மே 17 – தேசிய முன்னணியின் விசுவாசமான நீண்ட கால அரசியல் சகாக்கள் இருக்கும் பட்சத்தில் பி.வேதமூர்த்தி துணையமைச்சராக நியமிக்கப்பட்டது குறித்து ம.இ.காவின் இளைஞர் பிரிவு அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
“வேதமூர்த்தி நமது நாட்டின் நற்பெயரை அயல் நாடுகளில் கெடுத்தவர். அவரை அமைச்சரவைக்குள் கொண்டு வருவது ம.இ.கா போன்ற தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சிகளையும், தேசிய முன்னணியின் மற்ற இந்திய உறுப்பினர்களையும் பலவீனப்படுத்தும்” என ம.இ.கா இளைஞர் பகுதியின் தலைவர் டி.மோகன் நேற்று விடுத்த பத்திரிக்கை அறிக்கையில் கூறினார்.
“வேதமூர்த்திக்குப் பதிலாக, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருக்கும் ஐபிஎப் கட்சியின் பிரதிநிதிகளை அமைச்சரவையிலோ, அரசாங்கத்திலோ நியமித்திருக்கலாம். வேதமூர்த்தியைவிட மேலும் சிறந்த தேர்வை தேசிய முன்னணி செய்வதற்கு வாய்ப்பிருந்தது” என்றும் மோகன் கூறினார்.
ம.இ.காவின் நிலைமை இனி கேள்விக் குறி
தேசிய முன்னணியில் கடந்த 55 ஆண்டுகள் அங்கம் வகித்து வந்துள்ள ம.இ.காவிடம் வேதமூர்த்தியின் நியமனம் குறித்து எதுவும் கலந்தாலோசிக்கப்படவில்லை என்பதால், தேசிய முன்னணியில் ம.இ.கா வின் தற்போதைய நிலைமை கேள்விக் குறியாகி உள்ளதாகவும், மோகன் தெரிவித்தார்.
ம.இ.காவை தேசிய முன்னணி எவ்வளவு தூரம் திக்கிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி என்றும் மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.
21 நாள் உண்ணாவிரத நாடகம்
வேதமூர்த்தியின் நியமனம் மலேசிய அரசியலில் ஒரு மோசமான கலாச்சாரத்தை தொடக்கி வைத்துள்ளது என்று கூறிய மோகன் வேதமூர்த்தியின் 21 நாள் உண்ணாவிரதம் உண்மையான ஒன்றல்ல என்றும் சாடினார்.
“ஒருவர் 21 நாட்களுக்கு தேநீரும் பிஸ்கெட்டுகளும் உட்கொண்டு உண்ணாவிரதம் என்ற போர்வையில் போராட்டம் நடத்தினால் அதற்காக அவருக்கு துணையமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்து விடுவதா? இது போன்ற நாடகங்களை நாம் அனுமதிக்கக் கூடாது. இதுவே ஒரு புதிய கலாச்சாரமாக எதிர்காலத்தில் உருவெடுக்கும்” என்றும் மோகன் எச்சரித்தார்.