சென்னை, மே 17- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தற்போதைய அ.தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து உள்ளது. இதையொட்டி சட்டசபையில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளை பாராட்டி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்புரையாற்றினார்.
அப்போது முதல்-அமைச்சர் கூறியதாவது:-
நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தை திருத்த அந்த மக்களுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு என்றார் பேரறிஞர் அண்ணா. அவரது அமுத மொழிக்கேற்ப, மக்கள் நலன் ஒன்றையே மனதில் நிலை நிறுத்தி, அதற்கேற்றாற்போல் சட்டங்களை இயற்றி, திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு 2 ஆண்டுகளை பூர்த்தி செய்து இன்று 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
எனது தலைமையிலான அரசு இந்த ஈராண்டில் நிகழ்த்திய சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சி திட்டங்களை பாராட்டி பல்வேறு சட்டமன்ற கட்சிகளை சார்ந்த தலைவர்கள் இங்கே பேசினார்கள்.
இந்த அரசை பாராட்ட மனம் இல்லாதவர்கள் வெளியில் இருந்து கொண்டு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். சிலர் இந்த அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள். இங்கே இந்த அரசின் சாதனைகளை போற்றியவர்களுக்கும், வெளியில் இருந்து கொண்டு இந்த அரசை தூற்றியவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மக்களின் நலன், தமிழ்நாட்டின் நலன் ஆகியவற்றை குறிக்கோளாக கொண்டு இருப்பவர்கள் இந்த அரசின் திட்டங்களை, சாதனைகளை நிச்சயம் பாராட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னிலை மாநிலமாக விளங்க வேண்டும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும், ஒதுக்கப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும் பொருளாதார முன்னேற்றத்தில் உரிய பங்கினைப் பெற வேண்டும் என்ற வகையில் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
ஏழை, எளியோர் நலன் காக்கும் வகையிலும், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விலையில்லா அரிசி, மலிவு விலையில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், சர்க்கரை ஆகிய பொருட்களை வழங்கும் சிறப்பு திட்டம், சென்னை மாநகராட்சியின் சார்பில் மலிவு விலை உணவகங்கள், வெளிச்சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சமையல் எரிவாயு மீதான மதிப்புக்கூட்டு வரி முற்றிலும் நீக்கம் என பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஏழை மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம், திறன் வளர் பயிற்சிகள், தொழில் தொடங்க கடன் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய பெண்களை பாதுகாக்கும் வகையில் திருமாங்கல்யத்துடன்கூடிய திருமண உதவித்திட்டம், சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் இரட்டிப்பு, தாய்மார்களின் நலன் காக்க விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி, பசுமை வீடுகள் என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயத்துறையை பொறுத்தவரையில், இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்திடும் வண்ணம் பயிர்க் கடன் வழங்குதல், இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம், தானே புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம், உற்பத்தியை பெருக்க புதிய உத்திகளை கையாளுதல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் முதலான நுண்ணீர் பாசன அமைப்புகளை சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்குதல் என விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில், இந்த இரண்டு ஆண்டுகளில், ரூ.26,000 கோடி முதலீட்டுடன், ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், மக்களின் தேவைகளை கேட்டறிந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு தெரிவிக்கும் கோரிக்கைகளின் அடிப்படையிலும், பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் என்னால் நாள்தோறும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்தத் திட்டங்களின் நன்மைகளை நன்கு அறிந்த மாமன்ற உறுப்பினர்கள், இந்த திட்டங்களின் பயனாளிகள், தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கிப்போகிறது என்பதை அறிந்த நல்உள்ளம் படைத்த பொதுமக்கள் இந்த அரசை, இந்த அரசின் சாதனைகளை மனமுவந்து பாராட்டுகிறார்கள்.
இந்த அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பயன் அளித்தாலும், தங்களுக்கு பயன் அளிக்காது, தங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என்று நினைப்பவர்கள் தான் இந்த அறிவிப்புகளுக்காக அரசை குறைகூறிக் கொண்டு இருக்கிறார்கள், கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய 2 ஆண்டுகளில் சட்டமன்றப்பேரவை விதி 110-ன் கீழ் 63 அறிக்கைகளை இந்த மாமன்றத்தில் நான் சமர்ப்பித்துள்ளேன். இந்த 63 அறிக்கைகளில் 136 அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 127 அறிவிப்புகள் மீது முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கட்டுமான பணிகள் தொடர்புடைய பணிகள் நடைபெற்று வருகின்றன. எஞ்சியவை முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன.
சட்டமன்றத்திலே அந்தந்த துறைகளின் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் முடிந்ததும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே இந்த அறிவிப்புகளை ஏன் செய்யவில்லை என்று கருணாநிதி கேட்டுள்ளார்.
இந்த புதிய அறிவிப்புகள் அறிவிப்பாக செய்யப்பட வேண்டும் என்பதற்காக செய்யப்படுபவை அல்ல. மானிய கோரிக்கை மீதான விவாதங்களின்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துச்சொல்லும் ஆலோசனைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை நிதித்துறையுடனும், உயர் அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து அதன்பிறகே அறிவிப்புகள் வெளியிட இயலும்.
அந்த அடிப்படையில்தான், பல அறிவிப்புகள் இந்தப்பேரவையில் என்னால் வெளியிடப்பட்டுள்ளன. உதாரணமாக, பல்வேறு குடிநீர் திட்டங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சலுகைகள், நெசவாளர்களுக்கான பசுமை வீடுகள் திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் இந்த அடிப்படையில்தான் என்னால் வெளியிடப்பட்டு உள்ளன.
இந்த அரசை குறை சொல்வதோடு தி.மு.க.வினர் நிறுத்திக் கொள்ளவில்லை. இந்த சட்டப் பேரவையில் அறிவிக்கப்படும் திட்டங்களை பாராட்டும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கேலி செய்கிறார்கள்.
உறுப்பினர் துரைமுருகன், ஒரு பொதுக்கூட்டத்திலே இது 110 சர்க்கார். நாள் தவறினாலும் சரி, 110 படிக்காமல் இருப்பதில்லை. அந்த 110 படித்து முடித்தவுடன், சட்டமன்றத்திலே சிறு குறு விவசாயிகள் இருக்காங்க அந்த ஒரத்திலே, ஒரு எம்.எல்.ஏ., இரண்டு எம்.எல்.ஏ., அரை எம்.எல்.ஏ., இவங்க பூராவும் எழுந்துகிறாங்க. உடனே, பாராட்டு பாராட்டு, பாராட்டு. என்று பேசியுள்ளார்.
இவ்வாறு பேசி உள்ளதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் துரைமுருகன் அவமானப்படுத்தவில்லை. சிறு, குறு விவசாயிகளையும் இழுக்காகப்பேசி அவமானப்படுத்தி உள்ளார்.
தங்களது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு செய்ய இயலாத நன்மையை எல்லாம் எனது தலைமையிலான அரசு செய்து வருகிறதே என்கிற ஆதங்கத்தில் பொறாமையில், கோபத்தில், வெறுப்பில், வார்த்தைகளை உதிர்த்து இருப்பது தி.மு.க.வினர் விரக்தியின் விளிம்பில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
யார் என்ன சொன்னாலும், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பதற்கேற்ப, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கவும், தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டவும், இழந்த உரிமைகளை மீட்கவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்த அரசின் சாதனைகளை பாராட்டி, வாழ்த்தி பேசியவர்களின் பொன்மொழிகள் எனக்கு மேலும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்துள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சட்டமன்ற கட்சி தலைவர்கள் எல்லாம் இந்த அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பாராட்டி, வாழ்த்தி பேசியதற்கு எனது இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.