பெட்டாலிங் ஜெயா,மே 20 – செனட்டர் பதவி கிடைக்காத வருத்தத்தில் ம.இ.கா கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான கே.பி.சாமி,விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று அக்கட்சி வட்டாரங்களில் பரவலாக நிலவி வந்த கருத்துக்கு சாமி (படம்) மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “ இளைய தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் தான் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தேன் ஆனால் கட்சித் தலைவர் என்னை தொடர்ந்து ம.இ.காவில் இருக்கும் படி கேட்டுக்கொண்டதால் எனது பதவியை ராஜினாமா செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி துணையமைச்சராகப் பதவியேற்றது குறித்து தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் சாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ம.இ.கா தலைவர் சாமி வேலு பதவி விலக வேண்டும் என்று அவருக்கு எதிராக போர்கொடி தூக்கி, பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட மூன்று ம.இ.கா தலைவர்களுள் கே.பி.சாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ம.இ.கா தலைவராக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் கட்சியுடன் இணைந்த கே.பி. சாமிக்கு, மத்திய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.