கோலாலம்பூர், ஜூலை 8 – நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது மட்டுமே மஇகாவில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தெரிவித்துள்ளது.
மஇகா மறுதேர்தலில் எந்தெந்தக் கிளைகள் எல்லாம் பங்கேற்கலாம் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என அக்கட்சியைச் சேர்ந்த கே.பி.சாமி, டத்தோ குமார் அம்மான் மற்றும் எல்.சிவசுப்ரமணியம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
“கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே நாங்கள் செயல்படுகிறோம். கட்சித் தேர்தல் நியாயமாக, முறையாக நடத்தப்படவில்லை எனில், தேர்தலில் தோல்வி அடையும் தரப்பு, கட்சியை விட்டு வெளியேறும். இதனால் மஇகா மேலும் பலவீனமடையும்,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கே.பி.சாமி.
மறுதேர்தலில் பங்கேற்கப் பழனிவேல் தரப்பையும் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், எந்தெந்தக் கிளைகள் தேர்தலில் பங்கேற்கலாம் என்பதை ஆராய சங்கப் பதிவகம் தங்களை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதன் மூலம் பழனிவேலின் ஆதரவாளர்கள் முறைகேடாகத் தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்பதைத் தங்களால் உறுதிசெய்ய முடியும் என்றார் அவர்.
இதற்கிடையே நடுநிலையாளர் ஒருவரை நியமித்து மஇகா தேர்தலை நடத்த பிரதமர் நஜிப் ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் குமார் அம்மான் யோசனை தெரிவித்துள்ளார்.
“தேசிய முன்னணியைச் சேர்ந்த ஒருவரைப் பிரதமர் இதற்காக நியமிக்கலாம். இதன் மூலம் தேர்தல் முடிவுகளை இரு தரப்பினருமே ஏற்கும் நிலை உருவாகும்,” என்று குமார் அம்மான் மேலும் கூறினார்.
இந்நிலையில் டத்தோ விக்னேஸ்வரனுடனான தங்களது சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட இம்மூவரும், அச்சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து விவரம் ஏதும் தெரிவிக்கவில்லை.