Home நாடு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்வார்

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அன்வார்

509
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், ஜூலை 8 – மேல் சிகிச்சை பெறுவதன் பொருட்டு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் இதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்குச் சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

“தோள்பட்டை வலிக்காக அவருக்கு (அன்வார்) முடநீக்கியல் (ஃபிசியோதெரப்பி) சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் அவரது ரத்தக் கொதிப்பு அளவும் கண்காணிக்கப்படும். சிறுநீரகப் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது,” என்று பிகேஆர் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபக்மி ஃபட்சில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தனி வார்டில் அன்வார் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சிகிச்சைக்காக அன்வார் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் அன்வாரைக் காண அவரது மனைவி டத்தோஸ்ரீ வான் அசிசா அனுமதிக்கப்பட்டார்,” என்றும் ஃபக்மி மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், அன்வாரின் உடல்நிலை தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அவரது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. கடந்த ஜூன் மாதம் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்காக அன்வார் கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு நாள் மருத்துவமனையில் இருந்த பின்னர் அவர் மீண்டும் சிறை திரும்பினார்.

சுங்கைபூலோ சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் அன்வாரின் உடல்நிலை மோசமாகி வருவதாகக் கடந்த மே மாதம் அவரது குடும்பத்தாரும் வழக்கறிஞர்களும் கவலை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.