Home நாடு வால் ஸ்டிரீட் ஜார்னலுக்கு எதிராக வழக்கு – அம்னோ வழக்கறிஞர்கள் மனு தயாரிப்பு

வால் ஸ்டிரீட் ஜார்னலுக்கு எதிராக வழக்கு – அம்னோ வழக்கறிஞர்கள் மனு தயாரிப்பு

742
0
SHARE
Ad

1MDBகோலாலம்பூர், ஜூலை 8 – வால் ஸ்டிரீட் ஜார்னல் பத்திரிகையின் பதிப்பாளர் டோ ஜோன்ஸ் மீது வழக்குத் தொடுப்பதற்கான பணிகளில் அம்னோ வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, அவதூறு வழக்கில் அனுபவம் பெற்ற நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர்களுடன் தற்போது அம்னோ வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் வங்கிக் கணக்குகளில் 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாக வால் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டது. இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும், விவாதங்களும் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதையடுத்துப் பிரதமர் நஜிப் சார்பில் அப்பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கப்படும் எனக் கடந்த வாரம் தகவல் வெளியானது. நஜிப்புக்கு ஆதரவாகக் கருத்து வெளியிட்டவர்களும், வழக்குத் தொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

“தற்போது சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். டோ ஜோன்சுக்குக் கடிதம் அனுப்பப்படும் முன்னர் இந்த நடவடிக்கைகளை முடித்துக் கொள்வோம்,” என அம்னோ வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1எம்டிபியின் தொகை முறைகேடாகப் பிரதமரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாகக் கடந்த வெள்ளிக்கிழமை வால் ஸ்டிரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டது.

இக்குற்றச்சாட்டை 1எம்டிபி தரப்பு உடனடியாக மறுத்தது. இதேபோல் தனிப்பட்ட ஆதாயங்களுக்காகத் தொகை ஏதும் பெறவில்லை எனப் பிரதமர் நஜிப்பும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும் தம் மீது இத்தகைய குற்றச்சாட்டு எழ முன்னாள் பிரதமர் துன் மகாதீர்தான் காரணம் என்றும், அவரது அண்மைய பொய்களில் இதுவும் ஒன்று என்றும் நஜிப் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.