கோலாலம்பூர், ஜூலை 8 – அனைத்துலகத் தளத்தில் மலேசியாவுக்குத் தாம் எந்த வகையிலும் சங்கடம் ஏற்படுத்தவில்லை எனத் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மாறாக, 1எம்டிபி முறைகேட்டின் வழி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தான் நாட்டுக்குச் சங்கடம் ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலம் மலேசியாவுக்குத் துன் மகாதீர் சங்கடம் ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள துன் மகாதீர், 1எம்டிபி முறைகேடு என்பது அனைத்துலக அளவில் அறியப்பட்ட முறைகேடாக உள்ளது என்பதை அனிஃபா கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“நஜிப், ஜோ லோ மற்றும் 1எம்டிபி குறித்து ஒட்டுமொத்த உலகத்திற்கும் தெரியும். உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் மலேசியாவும் உள்ளது என அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. இதுகுறித்து அனிஃபா வெட்கப்பட வேண்டும்.
“எனினும் அவர் இத்தகைய ஆய்வு முடிவுகளால் சங்கடப்படவில்லை எனத் தெரிகிறது. அதனால் தான் அவை குறித்து அவர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை” என்றார் மகாதீர்.
மற்ற நாடுகள் என்றால், இத்தகைய குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஒரு தலைவர் தமது பதவியை விட்டு விலகி, மன்னிப்பும் கோருவார் என மகாதீர் கூறியுள்ளார்.
“ஆனால் மலேசியாவில் அப்படிப்பட்ட ஒரு தலைவரைப் பணிப் பாதுகாப்பு என்கிற ஒரு காரணத்தைத் தவிர, வேறு காரணங்கள் இன்றி பலர் ஆதரிக்கின்றனர். நடந்துள்ள முறைகேடு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் பிரதமர் நஜிப்பிடம்தான் அமைச்சர் அனிஃபா கேள்வி எழுப்ப வேண்டும்.
“வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் அனைத்துச் செய்திகளிலும் நஜிப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு நான் பேட்டி தருவதற்கு முன்பே இவ்வாறு நிகழ்ந்துள்ளது,” என மகாதீர் சுட்டிக்காட்டியுள்ளார்.