கோலாலம்பூர், ஜூலை 8 – மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு நடுவில் புதிய திருப்பமாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைத் துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் மீது அரசு சாரா இயக்கம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது.
அமைச்சரவை ஒதுக்கிய நிதியில் 5 மில்லியன் வரை சரவணன் ஊழல் செய்திருப்பதாக, அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு ஒன்று, தங்களுக்குக் கிடைத்த புகார்க் கடிதத்தின் அடிப்படையில் இக்குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளது
பெர்கெமாஸ் (Pertubuhan Kebajikan dan Perpaduan Masyarakat Malaysia) என்ற அந்த அரசு சாரா இயக்கத்தின் தலைவரான என்.கோபாலகிருஷ்ணன் நேற்று தலைநகரில் உள்ள பான் பசிபிக் தங்கும் விடுதியில் அந்தக் கடிதத்தைச் செய்தியாளர்கள் முன் வாசித்தார்.
அதன் படி, “நாம் அறவாரியத்திற்கென அமைச்சரவை ஒதுக்கிய 5 மில்லியன் ரிங்கிட்டை சரவணன் எடுத்துக் கொண்டு விட்டதாக அந்தக் கடிதம் குற்றம் சாட்டுகின்றது. அதன் படி அரசாங்க அதிகாரிகளுக்கு அப்பணத்தைக் கொண்டு லஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்த நிதியைப் பயன்படுத்தி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலைத் தேசியத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று அந்தக் கடிதம் குறிப்பிடுவதாகக் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மேலும், அக்கடிதத்தில், “கடந்த வருடத்தின் இறுதியில், அதாவது 2014 அக்டோபரில், டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவின் வீட்டில் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், டத்தோ சரவணன், டத்தோஸ்ரீ வேள்பாரி, டத்தோ டி.மோகன் மற்றும் இன்னும் சிலர் கலந்து கொண்டனர்”
“அந்தக் கூட்டத்தில், இந்த நிதியைப் பயன்படுத்தி அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, டத்தோஸ்ரீ பழனிவேலைப் பதவியில் இருந்து விலக்குவது குறித்துக் கலந்தாலோசித்தனர்.
சரவணனோடு சேர்ந்து எல்லோரும் அதில் தங்களது பங்களிப்பைச் செய்தனர். நாம் அறவாரியத்திற்கு அமைச்சர் கைரி ஜமாலுடின் வழங்கிய 19 மில்லியன் நிதியில் 5 மில்லியன் நிதியைச் சரவணன் தனது சார்பில் வழங்கினார்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்றும் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோபாலகிருஷ்ணன் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பாடாங் செராய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராவார். பின்னர் அவர் அன்வார் இப்ராகிம் மீது சில குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.
மேலும் அந்தக் கடிதத்தில், நீதித்துறைக்குச் சரவணன் மூலமாகப் பணம் வழங்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே, டாக்டர் சுப்ரமணியம் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்புகள் வழங்கப்பட்டதாகவும் கோபாலகிருஷ்ணன் அந்தக் கடிதத்தை மேற்கோள் காட்டிக் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த நிதியின் மூலம் அரசாங்க அதிகாரிகளுக்கு மட்டும் லஞ்சம் அளிக்கப்படவில்லை, ஆதரவு தரும் மஇகா உறுப்பினர்களுக்கு அடிமட்ட அளவில் 300 ரிங்கிட் வரை விலையாகக் கொடுக்கப்பட்டதாகவும் அக்கடிதம் குற்றம் சாட்டுகின்றது.
“சுப்ரமணியத்தால் புத்ரா உலக வாணிப மையத்தில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்திற்கு வருகை புரிந்த ஒவ்வொரு மஇகா உறுப்பினர்களுக்கும் தலா 300 ரிங்கிட் வழங்கப்பட்டது. அவர்களுக்குச் சாப்பாடு, தங்குமிடம் ஆகியவை டைனஸ்டி மற்றும் பான் பசிபிக் தங்கும்விடுதிகளில் வழங்கப்பட்டதோடு, போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு மட்டும் 5 மில்லியன் ரிங்கிட் செலவானது. எனக்கு இது தெரியும். ஏனென்றால், சம்பந்தப்பட்ட அந்தப் பட்டியலை நான் பார்த்தேன்.” என்றும் அக்கடிதத்தை எழுதியுள்ள அநாமதேய நபர் குறிப்பிட்டுள்ளார் எனக் கோபாலகிருஷ்ணன் கூறியிருக்கின்றார்.
தனது அடையாளங்களை இரகசியமாக வைக்கும் படியும், காரணம் தனக்கும் தனது குடும்பத்தினரின் வாழ்விற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சுவதாகவும் அக்கடிதத்தை எழுதிய நபர் குறிப்பிட்டுள்ளார்.