கோலாலம்பூர், ஜூலை 8 – வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது 2.6 பில்லியன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கான ஆவணங்களை வெளியிட்டது குறித்து காவல்துறை விசாரணை நடத்தும் என தேசியக் காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
அந்த செய்தி நிறுவனத்திற்கு ஆவணங்கள் கிடைத்ததும் குறித்தும், கணினி குற்றங்கள் சட்டப்பிரிவு 4-ன் கீழ் அத்துமீறி இணையம் மூலமாக தகவல்களை கைப்பற்றும் குற்றத்தின் கீழும் விசாரணை நடத்தப்படும் என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
“வால் ஸ்திரிட் ஜார்னலை விசாரணை செய்வோம்” என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ள காலிட், அவ்விவகாரத்துடன் தொடர்புடைய வங்கி அதிகாரிகளும் விசாரணை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
“தனிப்பட்ட ஒருவரின் வங்கிக் கணக்கையோ அல்லது ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களையோ வெளியில் கசிய விடுவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியது. அப்படிப்பட்டவர்கள் குற்றவியல் சட்டம், பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் விசாரணை நடத்தப்படும்” என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.