Home கலை உலகம் நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

நடிகர் சங்கத் தேர்தல் தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

495
0
SHARE
Ad

pisasu-radha-ravi-24914-tசென்னை, ஜூலை 8- நடிகர் சங்கத் தேர்தலுக்குத் தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், நடிகர் சங்கத்தின் துணை விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறித்துச் சங்கங்களின் பதிவாளர் நேரில்  வந்து விளக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 15-ந்தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, நடிகர்கள் சங்கத் தேர்தலை நடத்த இடைக்காலத் தடை விதித்து கடந்த ஜூன் 26-ந்தேதி உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்தத் தடையை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

“சங்கத்தின் தேர்தல் நடவடிக்கை தொடங்கிவிட்டால், அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற பொதுவான விதியைத் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். இந்தச் சங்கத்தின் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்த பின்னர், அவர்களுக்கு வாக்காளர்கள் பெயர் விவரம் பட்டியல் வழங்கப்படும். இந்த நடைமுறைதான் நடிகர்கள் சங்கத் தேர்தலின்போது இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையும் நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

நடிகர்கள் சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி நடந்தது. இதில் 2 ஆயிரத்து 768 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அப்போது, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கவேண்டும் என்று சங்க துணை விதியில் திருத்தம் கொண்டுவரப் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், 7 ஆண்டு என்று பொதுக்குழுவில் ஏகமனதாக முடிவு செய்து, துணை விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்தத் திருத்தம் சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவற்றையெல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார்.

மேலும், தேர்தல் அறிவிப்பைச் செயற்குழு அறிவிக்க அதிகாரம் இல்லை. அந்த அதிகாரம் நிர்வாகக் குழுவிடம்தான் உள்ளது என்று மனுதாரர்கள் கூறியிருந்தார்கள். ஆனால், இந்த இரண்டு குழுக்களிலும் இடம்பெற்று இருப்பது ஒரே நபர்கள்தான். இவர்கள்தான் தேர்தல் தேதி, யார் தேர்தலை நடத்தும் அதிகாரி? உள்ளிட்டவைகளை முடிவு செய்யவேண்டும்.

இவற்றையெல்லாம் தனி நீதிபதி கவனிக்கத் தவறிவிட்டார். எனவே, தேர்தலுக்குத் தடை விதித்த அவரது உத்தரவை ரத்து செய்யவேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களைக் கூட்டியே தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்ததாக ராதாரவி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

ஆனால், நடிகர் சங்கத்தில் 700 போலி உறுப்பினர்கள் இருப்பதாக நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில், அதில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகளாவது உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என விதிமுறையை மாற்றியதற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க, சரத்குமார், ராதாரவி ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததால் அவர்கள் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க முடியாது என்று பூச்சி முருகன் கூறியுள்ளார்.

வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், “நடிகர் சங்கத்தின்  தேர்தலுக்குத் தடை விதித்துத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தக் குறைபாடும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை” எனக் கூறி, தேர்தலுக்குத் தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவை நீக்க மறுத்துவிட்டனர்.

மேலும், “தேர்தலில் போட்டியிடுபவர்களின் தகுதியை நிர்ணயம் செய்து கடந்த 2010-ம் ஆண்டு துணை விதியில் திருத்தம் செய்யப்பட்டதா? என்பதை அனைத்துச் சங்கங்களின் பதிவாளர்தான் உறுதி செய்யவேண்டும். எனவே, அவரை இந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக உத்தரவிடுகிறோம்” எனக் கூறி வழக்கை வரும் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.