Home 13வது பொதுத் தேர்தல் மீண்டும் ம.இ.கா. தேசியத் தலைவராக சாமிவேலு?

மீண்டும் ம.இ.கா. தேசியத் தலைவராக சாமிவேலு?

500
0
SHARE
Ad

Samy Velluமே 20 – ம.இ.கா தேசியத் தலைவர் தேர்தலுக்கான போட்டி நெருங்கி வரும் வேளையில், கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக மீண்டும் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலுவே தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டுமென அவருக்கு நெருக்குதல்கள் பெருகி வருகின்றன என ஃபிரி மலேசியா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சாமிவேலுவைப் பொறுத்தவரையில் இரண்டு முனைகளில் தற்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாகக் கலந்தாலோசித்து வருகின்றார்.

ஒரு புறம், அவரே தேசியத் தலைவர் தேர்தலில் நேரடியாக நின்று மீண்டும் கட்சியைக் கைப்பற்றுவது அல்லது ஒரு வேட்பாளரை நிறுத்தி அவருக்கு பகிரங்கமாக ஆதரவு தருவது என இரு கோணங்களில் அவர் சிந்தித்து வருகின்றார்.

இரண்டாவது கோணத்தைத் தேர்ந்தெடுத்தால், தற்போதைய துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தை தலைவருக்கு நிறுத்தி அவருக்கு ஆதரவு தர சாமிவேலு முடிவெடுக்கக் கூடும்.

அத்தகைய ஒரு முடிவை எடுக்கும் போது, சாமிவேலுவோடு இணைந்து களத்தில் இறங்க ம.இ.கா தேசிய உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ எம்.சரவணனும் தயாராகிவிட்டார் என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் சுப்ரமணியம் தலைவருக்கு போட்டியிட்டால், துணைத் தலைவராக சரவணன் போட்டியில் குதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

“திரும்பி வாருங்கள்” – கிளைத் தலைவர்கள் சாமிவேலுவிடம் வேண்டுகோள்

பல ம.இ.கா கிளைத் தலைவர்கள் சாமிவேலுவை நேரடியாகப் பார்த்து ம.இ.காவை மறு சீரமைப்பு செய்ய நீங்கள் திரும்பி வர வேண்டும் என கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களை சாமிவேலு ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் ம.இ.காவுக்கு அணுக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட தான் தீவிரமாக யோசித்து வருவதாக தனது ஆதரவாளர்களிடம் சாமிவேலு கூறியிருக்கிறாராம்.

கட்சியின் அடிமட்டத் தலைவர்களிடம் கட்சி தற்போது நடத்தப்பட்டுவரும் விதம் குறித்து சாமிவேலு தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

சாமிவேலு இன்னும் கட்சியின் பேராளர்களில் ஏறத்தாழ 45 சதவீதத்தினரின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று நம்பப்படுகின்றது.

பழனிவேலு-சாமிவேலு சந்திப்பு

Palanivelதனது தலைமைத்துவ போக்கு குறித்து சாமிவேலு திருப்திகரமாக இல்லை என்பது பழனிவேலுவுக்கும் தெரியும். கடந்த வாரம்தான் பழனிவேலு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், டாக்காவிலிருந்து திரும்பியிருந்த சாமிவேலுவைச் சந்தித்தார் என்றும் சாமிவேலுவின் மகன் வேள்பாரியை செனட்டராக நியமிக்கவிருப்பதாக அவரிடம் தெரிவித்தார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது, தான் பொறுப்பேற்றுள்ள விஞ்ஞான, சுற்றுச் சூழல் அமைச்சின் மூலமாக நிறைய திட்டங்களும், குத்தகைகளும் வழங்கப்படுவதாகவும் அவற்றை சாமிவேலு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பழனிவேலு அவரைக் கேட்டுக்கொண்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பழனிவேலுவின் இந்த இணக்கமானப் போக்கினால் சாமிவேலு மனம் மாறிவிடவில்லை என்றும் பழனிவேலுவை தேசியத் தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதில் சாமிவேலு மும்முரமாக இருக்கின்றார் என்றும் அந்த ம.இ.கா வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தலைவர் பதவிக்கு சுப்ரா-சரவணன் குறி

இந்த ஆண்டு ம.இ.காவின் தேர்தல்கள் கூடிய விரைவில் நடைபெற உள்ளன.

தேசியத் தலைவர் பதவிக்கு டாக்டர் சுப்ரமணியமும், டத்தோ சரவணனும் குறிவைத்துள்ளனர். ஆனால், சாமிவேலு தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால், இருவரும் ஒதுங்கிக் கொண்டு, சாமிவேலுவுக்கு ஆதரவு தருவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அப்படி சாமிவேலு தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்றால், அநேகமாக டாக்டர் சுப்ரமணியம் போட்டியில் குதிக்கக்கூடும். இரண்டு தவணைகள் அமைச்சராக இருந்த அனுபவம் அவருக்கு கைகொடுக்கும் என்பதோடு, அவர் சுமுகமாகப் பழகக்கூடியவர், ராஜதந்திரத்துடன் நடக்கக் கூடியவர் என்றும் ஃபிரி மலேசியா இணையத் தள செய்தி விவரிக்கின்றது.

இதுகுறித்து ஃபிரி மலேசியா தொடர்பு கொண்டபோது பேசிய ம.இ.கா வியூக இயக்குநர் வேள்பாரி, பழனிவேலுவும் சாமிவேலுவும் அண்மையில் சந்தித்துக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும் அது வழக்கமான சந்திப்பு என்றும், கேமரன் மலை வெற்றிக்குப் பின்னர் சாமிவேலுவைச் சந்திக்கவில்லை என்பதால்தான் பழனிவேலு அவரைச் சந்தித்தார் என்றும் வேள்பாரி தெரிவித்தார்.

“ஆனால் அந்த சந்திப்பில் பழனிவேலுவின் அமைச்சு பற்றியோ செனட்டர் நியமனம் பற்றியோ எதுவும் பேசப்படவில்லை. அவர்கள் இருவருக்கிடையிலும் நல்ல இணக்கமான போக்கு எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. மற்றபடி அவர்களின் சந்திப்பில் வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றும் வேள்பாரி  மேலும் விவரித்தார்.