பெட்டாலிங் ஜெயா, மே 21 – பிரதமர் துறை துணையமைச்சராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி, இனி தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்று ம.இ.கா வின் மத்திய செயற்குழு உறுப்பினரான கே.பி.சாமி(படம்) கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹிண்ட்ராப் நடத்திய வரலாற்றுப் பேரணிக்கு, தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளான ம.இ.கா, பிபிபி மற்றும் கெராக்கான் ஆகியவை தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தது என்றும் சாமி குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் அனைவரும் ஹிண்ட்ராப்புக்கு ஆதரவு அளித்தோம் என்பதை வேதமூர்த்தி ஒத்துக்கொள்ள வேண்டும். அதோடு அப்பேரணியில் பங்கேற்று கைதான 130 ஹிண்ட்ராப் ஆதரவாளர்களை தனிப்பட்ட முறையில் நான் பிணையில் விடுவிக்க உதவி இருக்கிறேன். எனவே இனி வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது தான் நல்லது” என்றும் சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் வேதமூர்த்தி துணையமைச்சராக நியமிக்கப்பட்டதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நஜிப்புக்கு முழு ஆதரவு தர வேண்டும்
“தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, நஜிப்புக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அதோடு உடனடியாக உட்கட்சிப் பூசல்களை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் காரணம் அமைச்சரவையில் யாரை நியமித்தால் மக்களுக்கு நல்ல முறையில் சேவையாற்ற முடியும் என்பது பிரதமருக்குத் தெரியும்” என்று சாமி கூறியுள்ளார்.
மேலும் இந்திய சமுதாயத்தினரை அங்கீகரிப்பதில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கைத் தவிர வேறு ஒரு சிறந்த தலைவர் வர முடியாது என்றே நான் கருதுகிறேன் என்றும் கே.பி.சாமி தெரிவித்துள்ளார்.