புதுடில்லி, மே 21 – இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சீனப் பிரதமர் லீ கெ கியாங் சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும் எனவும் சீனப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக டில்லி வந்துள்ள சீனப்பிரதமர் லீ கெ கியாங், நேற்று முன்தினம் இரவு பிரதமர் மன்மோகன் சிங்கை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினர். பின்னர் அவருக்கு பிரதமர் விருந்தளித்தார்.
நேற்று இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் நீர், வர்த்தகம் உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இன்று டில்லியில் நடந்த தொழிலதிபர்கள் மாநாட்டில் சீனப்பிரதமர் லீ கெ கியாங் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“வர்த்தகம் தொடர்பாக இந்தியா தெரிவித்துள்ள கவலைகள் தீர்க்கப்படும். இந்திய பொருட்களை, சீன சந்தைகள் பயன்படுத்த மேலும் பல வசதிகள் செய்து தரப்படும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக சமநிலையற்ற தன்மை சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது”.
மேலும் பேசிய அவர், “வர்த்தகத்தின் சமநிலை நிலவுவது, உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளின் உறவுக்கு மிகவும் முக்கியம் என்பதை சீனா உணர்ந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்னை தொடர்பாக இரண்டு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவுடன் நம்பிக்கையை ஏற்படுத்தவே சீனா விரும்புகிறது. நிலையான மற்றும் அமைதியான தெற்கு ஆசியாவே, சீனாவின் வளர்ச்சிக்கு உகந்தது. அதன் மூலம் உள்நாட்டுப பிரச்னைகளை சீனாவால் எதிர்கொள்ள முடியும்” என கூறினார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கடந்த ஆண்டு 66.5 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
