சென்னை, பிப்ரவரி 2 – கமலஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் படத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருந்து வரும் வேளையில், எதிர்வரும் திங்கட்கிழமை பிப்ரவரி 4ஆம் தேதி மீண்டும் நீதிமன்ற விசாரணை தொடரும்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முஸ்லிம் அமைப்பினரும் கமலஹாசனும் விஸ்வரூபம் பட விவகாரத்தில் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண அரசு உதவும் என அறிவித்தார். இதையடுத்து சென்னை கோட்டையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முஸ்லிம் கூட்டமைப்பு அமைப்பாளர் ஹனீபா, ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கமிஷனர் ஜார்ஜ், கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாசன், ஆடிட்டர் சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.
உள்துறை செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. கமலஹாசன் பேச்சு வார்த்தையில் பங்கேற்காததற்கு முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி வெளியிட்டனர். அவரிடம் தான் பேசுவோம் என கூறினர்.
இதை தொடர்ந்து கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கமல் மும்பையில் இருந்து இன்று மதியம் சென்னை திரும்பினார். மாலை 3 மணியளவில் கோட்டைக்கு சென்று உள்துறை செயலாளரை சந்தித்தார். இதையடுத்து மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 24 முஸ்லிம் அமைப்புகளைச்சேர்ந்த பிரதிநிதிகள், தவ்ஹீத் ஜமாஅத் பிரதிநிதிகள், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சு வார்த்தையின் போது முஸ்லிம் பிரதிநிதிகள் சர்சைக்குரிய காட்சிகள் எவை என்பது பற்றி கூறினார்கள். கமல் அவர்களிடம் தனது கருத்தை தெரிவித்தார். அரசு அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து விஸ்வரூபம் படம் எப்போது தமிழகத்தில் திரையிடப்படும் என்பது தெரிய வரும்.