கோலாலம்பூர், மே 28 – விசாரணைக்காக காவலில் வைக்கப்படுபவர்கள் மரணமடைவதைத் தடுப்பதற்கு சிறப்பு குழு ஒன்றை புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை நிறுவியுள்ளது என்று தேசிய காவல்துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த இந்தியரான தர்மேந்திரன் கடந்த மே 21 ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து, இந்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர்களுக்கு இனி அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு அமைக்க வேண்டும் என்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தர்மேந்திரன் இறப்பு குறித்து விசாரணை
தர்மேந்திரன் இறப்பு குறித்து காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது.
“தர்மேந்திரன் இறப்பு குறித்து காவல்துறைஅதிகாரிகள் பலர் விசாரணை செய்யப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுவருகின்றன.அவ்விசாரணை எவ்வித சமரசமும் இன்றி நடத்தப்படும். தர்மேந்திரனின் இறப்பில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று துணை இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லா தெரிவித்துள்ளார்.