Home நாடு “பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்

“பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தொல்லை கொடுக்கிறார்கள்” – தர்மேந்திரன் குடும்பம்

533
0
SHARE
Ad

Untitled-1

பெட்டாலிங் ஜெயா, மே 29 – பிரதமர் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக தடுப்பு காவலில் மரணமடைந்த தர்மேந்திரனின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தர்மேந்திரனின் தந்தையான வி.நாராயணசாமி இது குறித்து கூறுகையில், “கடந்த மே 27 ஆம் தேதி இரவு 9 மணியளவில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பிரதமர் துறையைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தன்னை அமைச்சர் டத்தோ பால் லோவின் உதவியாளர் என்று கூறிக்கொண்டார். எங்களை நேரில் சந்திக்க விரும்புவதாகவும் ஆனால் இச்சந்திப்பு எங்களது வழக்கறிஞர்களுக்கு தெரியாத வகையில் ரகசியமாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதோடு நாங்கள் இவ்வழக்கு தொடர்பாக புதிய வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்” என்று பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த மே 21 ஆம் தேதி கோலாலம்பூர் காவல்துறை தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த தர்மேந்திரன்(வயது 32) திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அவரை உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பால் லோ மறுப்பு 

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் லோ கூறுகையில், “எனது உதவியாளர் அக்குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் நான் விவாதிக்கவுள்ளேன் என்ற தகவலை தெரிவிக்கவும், அவரது இறப்பு குறித்து எங்களது அனுதாபங்களை கூறிக்கொள்ளவும் தான் எனது உதவியாளரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். தங்களது வழக்கறிஞரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் தர்மேந்திரன் குடும்பத்தாருக்கு முழு உரிமை உள்ளது. அவர்கள் ஏன் இவ்வாறு மாற்றி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு அரசியல் நாடகமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

தர்மேந்திரன் மனைவி அதிருப்தி

தர்மேந்திரன் இறப்பு தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்குவதில் ஏற்படுத்தும் தாமதம் குறித்து தர்மேந்திரன் மனைவி மேரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

“பிரேதப் பரிசோதனை அறிக்கையில் எனது கணவர் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி இறந்திருக்கிறார் என்று நிரூபனம் ஆகியுள்ளது. ஆனால் இன்னும் சம்பந்தப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளை கைது செய்யாதவர்கள், எங்களை ஏன் துன்புறுத்துகிறார்கள்” என்று மேரி தெரிவித்துள்ளார்.