கோலாலம்பூர் – மலேசியக் காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது, சில காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைந்த என்.தர்மேந்திரனின் மனைவி மேரி சூசை, காவல் துறைத் தலைவர் (ஐஜிபி), மலேசிய அரசாங்கம், சில காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
அவரது சார்பாக பிகேஆர் கட்சிப் பிரமுகரும் வழக்கறிஞருமான என்.சுரேந்திரன் (படம்) இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பான முறையில் தனது நிகழ்ந்த தனது கணவருடைய மரணத்துக்காக நியாயம் கேட்டும், தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவராகத் திகந்த தர்மேந்திரனின் இழப்பின் காரணமாக நஷ்ட ஈடு கேட்டும், மேரி சூசை இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
தர்மேந்திரன் தம்பதியருக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறார்.
அண்மையில் தர்மேந்திரனின் மரணத்தை ஆராய்ந்த நேர்மை அமுலாக்க ஆணையம் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்துதான் இந்த வழக்கைத் தொடுத்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவும், 9 காவல் துறை அதிகாரிகளை தாங்கள் இந்த வழக்கில் பெயர் குறிப்பிட்டிருப்பதாகவும், சுரேந்திரன் கூறியுள்ளார். அந்த 9 பேரில் அப்போதைய கோலாலம்பூர் குற்றப்பிரிவுத் தலைவர் டத்தோ கூ சின் வா ஒருவர் என்றும் சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் பண இருட்டடிப்பு குற்றங்களுக்காக கூ சின் வா மீது தனியாக வேறொரு வழக்கு நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், அப்போதைய கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் சாலே ஆகியோரும் தங்கள் வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 9 பேர்களில் அடங்குவர் என்றும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.