Home நாடு “தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி

“தர்மேந்திரன் இறப்பில் தொடர்புடைய அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்” – வேதமூர்த்தி

592
0
SHARE
Ad

waythamoorthyகோலாலம்பூர், மே 30 – தடுப்பு காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரன் மரணமடைந்தது தொடர்பில், சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வரும் என்று பிரதமர் துறை துணை அமைச்சரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“கொலை என்பது மன்னிக்க முடியாத குற்றம். தர்மேந்திரன் இறப்பிற்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பதவி இடை நீக்கம் செய்து, விசாரணை முடியும் வரை காவலில் வைக்க வேண்டும்” என்றும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் “சட்டம் என்பது காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் பொதுவானது. குற்ற செய்ததாக சந்தேகிக்கப்படும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில், அது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்வதோடு, காவல்துறையின் மீது வெறுப்பையே ஏற்படுத்தும்.

#TamilSchoolmychoice

பொதுமக்களின் உயிருக்கும், அடிப்படை உரிமைகளுக்கும் காவல்துறை மதிப்பளிக்கவில்லை என்பதையே இச்சம்பவம் பிரதிபலிக்கிறது.

எனவே காவல்துறையில் உள்ள மேலதிகாரிகள் இவ்விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையையும், காவல்துறையின் நேர்மையையும் நிலைநாட்ட முடியும்.” என்று வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“குற்றம் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத காவல்துறை, எப்படி நாட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் குறைத்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும்?” என்றும் வேதமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு முன், ஹிண்ட்ராப் தேசிய முன்னணி அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் போது, தடுப்புக் காவலில் இந்தியர்கள் மரணமடைவதை தடுக்க வேண்டும் என்பது முக்கிய அங்கமாக இருந்து பிறகு தளர்த்திக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.