கோலாலம்பூர், மே 31 – நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசாங்கம் வெளிப்படையானது என்று பொதுமக்களுக்கு காண்பிக்க என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என்று சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரான டாக்டர் முகமட் கிர் தோயோ தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதோடு, இவ்வழக்கை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் தான் மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் கிர் தோயோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கூட்டரசுப் பிரதேசத்தில் தேவையான ஆதாரங்களை முன்வைத்தாலும் தனக்கு எதிராகவே தான் தீர்ப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த கிர், தான் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிர் தோயோவுக்கு உயர் நீதிமன்றம் ஏற்கனவே 12 மாத சிறைத் தண்டனை வழங்கி, வழக்கில் சம்பந்தப்பட்ட நில சொத்துக்களை பறிமுதல் செய்தும் உத்தரவிட்டிருந்தது.
அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்த கிர் தோயோவின் விண்ணப்பத்தை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று அந்த தண்டனையை மறு உறுதிப்படுத்தியது.
ஊழல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் அனைத்தையும் தனது சொந்த உழைப்பில் வாங்கியதாகவும், இவ்வழக்கில் சாட்சியமளித்தவர்கள் தனக்கு எதிராக சாட்சியம் அளித்துவிட்டதாகவும் கிர் தோயோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.