லண்டன், ஜுன் 1- இங்கிலாந்தின் ராணியாக எலிசபத்திற்கு முடிசூட்டு விழா நடைபெற்ற 60-வது ஆண்டு விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
நான்காம் ஜார்ஜ் மன்னர் மறைவையடுத்து இங்கிலாந்தின் ராணியாக 2-6-1953 அன்று தனது 27-வது வயதில் எலிசபத் முடிசூட்டிக் கொண்டார்.
இந்த முடிசூட்டு விழாவை கோடிக் கணக்கான மக்கள் நேரடி ஒளிபரப்பின் மூலம் தொலைகாட்சியில் கண்டு மகிழ்ந்தனர்.
தொலைக்காட்சி இல்லாதவர்கள் வானொலி வர்ணனையை கேட்டு ரசித்தனர்.
தற்போது 87 வயதாகும் ராணி எலிசபத் தனது முடிசூட்டு விழாவின் 60-வது ஆண்டை கோலாகலமாக கொண்டாட உள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள ‘விண்ட்சர் கேஸ்டில்’ அரண்மனையில் தனது கணவர் பிலிப் (91) உடன் தேவாலய வழிபாட்டில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) பங்கேற்கும் ராணி அன்று முழுவதும் அங்கேயே தங்கி இருப்பார் என ராணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மறுநாள் (திங்கட்கிழமை) லண்டனில் உள்ள கிரீன் பார்க்கில் 42 குண்டுகள் முழங்க ராணிக்கு மரியாதை செய்யப்படும். அதனையடுத்து லண்டன் டவர் பகுதியில் 62 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும்.
இந்த விழாக்களை காண லண்டன் நகர மக்களும், பிரிட்டைன் நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களும் இப்போதே தயாராகி வருகின்றனர்.
லண்டன் நகரின் வீதிகள், அரண்மனை வளாகம் மற்றும் கடைகள் ஆகியவை வண்ண விளக்குகளின் ஒளி வெள்ளத்தில் மின்னுகின்றன. பண்டிகை காலத்திற்கு இணையான மகிழ்ச்சி மக்களின் முகங்களில் காணப்படுகின்றது.
பக்கிங்காம் அரண்மனை தோட்டத்தில் ராணியின் உபயோகப் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் கண்காட்சியும் அவர் அணிந்த ஆடை, நகைகள் போன்றவற்றின் கண்காட்சியும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.