Home இந்தியா தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் – 10 ஆண்டுகளில் 97 லட்சம்...

தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சம் – 10 ஆண்டுகளில் 97 லட்சம் உயர்வு

705
0
SHARE
Ad

tamil-naduசென்னை, ஜுன் 1- தமிழகத்தில் எடுக்கப்பட்ட 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி கடந்த 10 ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி தெரிவித்தார்.

2011–ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய புள்ளி விவர பட்டியலை, சென்னையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையின் தமிழ்நாடு இணை இயக்குனர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ் வெளியிட, பத்திரிகை தகவல் தொடர்பு துறை இணை இயக்குனர் எம்.வி.எஸ்.பிரசாத் பெற்றுக் கொண்டார். பின்னர் எம்.ஆர்.வி.கிருஷ்ணராவ், நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 9–ந் தேதி முதல் பிப்ரவரி 28–ந் தேதி வரை நாடு முழுவதும் கணக்கெடுப்பு பணி நடந்தது. தொடர்ந்து அதே ஆண்டு மார்ச் 1–ந் தேதி முதல் 5–ந் தேதி வரை மீண்டும் சரிபார்ப்பு பணியும் நடந்தது.

#TamilSchoolmychoice

இதற்காக 29 கேள்விகள் அடங்கிய குடும்ப அட்டவணையில், கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று உரிய தகவல்களை சேகரித்தனர். தமிழகத்தில் இந்தப்பணியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கணக்கெடுப்பாளர்களாகவும், 19 ஆயிரம் பேர் மேற்பார்வையாளர்களாகவும் பணியாற்றினர். இதுதவிர கலெக்டர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார், நகராட்சி ஆணையாளர்களும் பொறுப்பு அதிகாரிகளாக செயல்பட்டனர்.

2011–ம் ஆண்டு கணக்கெடுப்பு படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975, பெண்கள் 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 ஆகும். நகரப்பகுதியில் 3 கோடியே 49 லட்சத்து 17 ஆயிரத்து 440 எனவும், கிராம பகுதியில் 3 கோடியே 72 லட்சத்து 29 ஆயிரத்து 590 எனவும் மக்கள் தொகை பதிவாகியுள்ளது.

2001–ம் ஆண்டு முதல் 2011 ம் ஆண்டு வரை கடந்த பத்து ஆண்டுகளில் 97 லட்சம் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. கிராமப்பகுதியில் 23 லட்சமும், நகரப்பகுதியில் 74 லட்சமாகவும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.

மக்கள்தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் முதல் மூன்று மாவட்டங்களை பிடித்த மாவட்டங்கள் சென்னை (46,46,732), காஞ்சீபுரம் (39,98,252), வேலூர் (39,36,331). கடைசி இடத்தை பிடித்த மாவட்டங்கள் அரியலூர் (7,54,894), நீலகிரி (7,35,394), பெரம்பலூர் (5,65,223) ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சியும் 15.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தற்போதைய கணக்கெடுப்பின் படி ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் 555 மக்கள் வசிக்கின்றனர். இது 2001–ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் முதல் மூன்று இடங்களை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன. கடைசி இடத்தை பெரம்பலூர், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளன.

ஆண்–பெண் பாலின விகிதமானது 2001–ம் ஆண்டு 992 புள்ளிகளாக இருந்தது. இது 2011–ம் ஆண்டு கணக்கெடுப்பு படி 993 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. முதல் மூன்று மாவட்டங்கள் நீலகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினமும், கடைசி மூன்று மாவட்டங்கள் கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகியவையாகும். கோயம்புத்தூர், சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், நீலகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்– பெண் பாலின விகிதமானது ஆயிரம் புள்ளிகளுக்கும் அதிகமாக பதிவாகி உள்ளது.

2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி தமிழ்நாட்டில் குழந்தைகளின் (6 வயதிற்கு உட்பட்ட) எண்ணிக்கை 74 லட்சத்து 23 ஆயிரத்து 832 ஆகும். இதில் 38 லட்சத்து 20 ஆயிரத்து 276 ஆண் குழந்தைகளும், 36 லட்சத்து 3 ஆயிரத்து 832 பெண் குழந்தைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. ஷெட்யூல்டு வகுப்பினர்கள் ஒரு கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 445 ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி விகிதமும் 21.8 சதவீதமாக பதிவாகி உள்ளது. ஷெட்யூல்டு பழங்குடியினர் 7 லட்சத்து 94 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ளது. வளர்ச்சி விகிதமும் 22 சதவீதமாக பதிவாகியுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 507 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 40 ஆயிரத்து 491 ஆண்களும், 2 கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 16 ஆக பதிவாகி உள்ளது. மொத்த எழுத்தறிவு விகிதம் 80.1 சதவிகிதமாகும். இதில் 86.8 சதவிகிதம் ஆண்களும், 73.4 சதவிகிதம் பெண்களாகவும் உள்ளனர். எழுத்தறிவுள்ளவர்கள் வசிக்கும் மாவட்டங்களில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்கள் கன்னியாகுமரி (91.7), சென்னை (90.2), தூத்துக்குடி (86.2) சதவிகிதமாகும். கடைசி மூன்று இடத்தை பிடித்த மாவட்டங்களாக கிருஷ்ணகிரி (71.5), அரியலூர் (71.3), தர்மபுரி (68.5) சதவிகிதமாகும்.

தமிழகத்தில் வேலைசெய்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 681 ஆக பதிவாகி உள்ளது. இதில் 42.5 சதவீதம் மக்கள் விவசாயமும், 96 லட்சம் மக்கள் விவசாய கூலியாகவும் வேலை பார்க்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 45.6 சதவிகிதமாகும். கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை விட 44.7 சதவீதத்தை விட சிறிதளவு அதிகரித்துள்ளது.

அதே நேரம் கடந்த 10 ஆண்டுகளில் 8.7 லட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தும், 9.7 லட்சம் விவசாயக்கூலி வேலைசெய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், வீட்டில் செய்யும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக குறைந்தும் மற்றும் மற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்து பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.