ஈப்போ, ஜூன் 10 – பேராக் மாநில சபாநாயகர் பதவி நியமனம் குறித்து அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம் என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
மேலும் சபாநாயகர் பதவி நியமனம் பற்றி மாநில சட்டமன்ற கூட்டத்தில் மட்டுமே அறிவிக்கப்படும். அதன் பின்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் பதவியில் அமர்த்தப்படுவார் என்றும் ஸம்ரி தெரிவித்துள்ளார்.
“பதவி நியமனம் குறித்து எனது விருப்பத்தின் பேரில் அறிவிக்க முடியாது. எனது பங்கிற்கு சிறப்பு அதிகாரி மற்றும் இந்திய சமூகத்தின் ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கு பொருத்தமானவர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்து மாநில செயலாளரிடம் கொடுத்துவிட்டேன்” என்று ஸம்ரி இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பேரா மாநில சட்டமன்ற தலைவர் பதவி ம.இ.கா வைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் பேராக் மாநில அரசாங்க பதவிகள் எதையும் ம.இ.கா ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கடந்த சனிக்கிழமை ம.இ.கா தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.