நயன்தாரா காதல் விவகாரத்தில் சிக்கி பலத்த சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளானாலும், தனது கலைத் திறமையையும், உழைப்பையும் விட்டுக் கொடுக்காத, சமரசம் செய்து கொள்ளாத பிரபுதேவாவின் கைவண்ணத்தில் வெளிவந்து சக்கை இந்தியா முழுக்க தற்போது வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் இந்திப் படம்தான் ரவுடி ரத்தோர்.
தமிழில் ஏற்கனவே வெளிவந்து, நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக்கு நகைச்சுவை நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு, வசூலிலும் வெற்றி பெற்ற “சிறுத்தை” படத்தின் இந்தி வடிவம்தான் இந்த ரவுடி ரத்தோர்.
அக்க்ஷய் குமார் இரட்டை வேடங்களில் சிறப்பான நகைச்சுவையோடு கூடிய நடிப்பை வழங்கியிருக்கின்றார். படமும் இந்தியாவிலும் உலகெங்கும் வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வருடத்தில் வெளிவந்த இந்திப் படங்களில் மிகக் குறுகிய காலத்தில் நூறு கோடி (ஆயிரம் மில்லியன்) ரூபாய்க்கும் மேல் வசூலிக்கப் போகும் முதல் படம் இதுதான் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கதாநாயகியாக வலம் வருபவர் தற்போதைய இந்திப் படவுலகை ஈர்த்துக் கொண்டிருக்கும் காந்தம் சோனாக்க்ஷி சின்ஹா. எல்லா நவீன இந்திப் படக் கதாநாயகிகளும் ஒல்லியான உடல் வாகோடு உலா வர, சோனாக்ஷியோ. கொழு கொழு உடம்போடு, திம்சுக் கட்டை பாணியில் அறிமுகமாகி அண்மையில் சல்மான் கானோடு “தபாங்” படத்தில் ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்தார்.
இந்த ரவுடி ரத்தோர் அவருக்கு இரண்டாவது படம். இதிலும், அதிரடியாக அக்க்ஷய் குமாரோடு ஆட்டம் ஆடி கவர்கின்றார், பழைய இந்திப்பட வில்லனும், பா.ஜ,க அரசியல்வாதியுமான சத்ருக்கன் சின்ஹாவின் புதல்வியான சோனாக்க்ஷி.
படத்தில் வில்லனாக வந்து சொந்தக் குரலிலேயே பேசி அசத்துகின்றாரே, எங்கோயோ பார்த்த மாதிரி இருக்கின்றதே என்று ஆரம்பக் காட்சிகளில் உற்று பார்த்தால், அட நம்ம நாசர்! தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் தகுந்த வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கலக்க முடியும் என்று நிரூபித்திருக்கின்றார்.
முதல் பாட்டிலேயே கௌரவ வேடத்தில் வந்து அசத்தலாக ஒரு நடனத்தையும் பிரபுதேவாவின் நட்புக்காக வழங்கியிருப்பவர் விஜய். அக்க்ஷய் குமார் “அட நம்ம சூப்பர் ஸ்டார் விஜய்” என்று தமிழிலேயே வரவேற்பு கூற, பிரபுதேவாவும் தமிழிலேயே விஜய்யுடன் பேசி நடனமாடக் கூப்பிட அதன்பின் விஜய் தனது பாணியிலான நடனத்தை வழங்குகின்றார்.
அதே பாட்டில் பிரபுதேவாவும் சில நடன அசைவுகளை வழங்கிச் செல்கின்றார். கவர்ச்சியான உடையில் கௌரவ வேடத்தில் கரினா கபூரும் வந்து செல்கின்றார்.
வழக்கமான கதைதான் என்றாலும், அதனை சுவாரசியான திரைக் கதையாக வடிவமைத்து, நகைச்சுவையும் கலந்து சரியான விகிதத்தில் தந்த விதத்தில் தற்போது பிரபுதேவா முன்னணி இந்திப்பட இயக்குநராகிவிட்டார்.
இந்திப்பட ரசிகர்களுக்கு செமத்தியான விருந்து வைத்திருக்கும் நல்ல பொழுது போக்கு அம்சங்களைக் கொண்ட ரவடி ரத்தோர் பார்த்து ரசிக்க வேண்டிய படமாகும்.
-சினிமா முரசன்