மும்பை, ஜூன் 13- தற்கொலை செய்ததாக கூறப்படும் இந்தி நடிகை ஜியா கான் வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது காதலர் சூரஜ் பஞ்சோலி அடித்து துன்புறுத்தியதனால் தான் அவர் இறந்து விட்டதாக ஜியா கானின் தாயார் ராபியாஅமின் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த அவர் ஜியா கானின் உடலில் காயங்களை கண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டை நடிகையும் சூரஜ் பஞ்சோலியின் தாயாருமான சரீனா வஹாப் மறுத்துள்ளார்.
மகள் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தெரிவித்த ராபியாஅமின் கான், மகளின் தவறுகளை மறைப்பதற்காக தன் மகன் மீது பழிப்போடுவதாக தெரிவித்துள்ளார். பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் ஜியா கானுடன் சேர்ந்து ஒரு வருடம் வாழ்ந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சூரஜ் பஞ்சோலி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த ஜியா கானுக்கு கரு சிதைவு செய்த மருத்துவரிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன. இந்நிலையில் சினிமா உலகில் இது போன்ற உறவுகள் சாதாரணம் என பிரபல இந்தி நடிகர் ராசா முராத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக மும்பை காவல்துறையில் பதிவு செய்துள்ள வழக்கில் விசாரணை முடிந்து, சூரஜ் பஞ்சோலி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
25 வயதான நடிகை ஜியா கானுக்கும், 22 வயதே ஆன சூரஜ் பஞ்சோலிக்கும் இடையேயான உறவு இறுதியில் மரணத்தில் முடிந்துள்ளது.
ஜியா கான் எழுதி வைத்துள்ள 6 பக்க கடிதத்தின் அடிப்படையில் மும்பை காவல்துறை கடந்த திங்களன்று பஞ்சோலியை கைது செய்து விசாரித்து வருகின்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் ‘நிஷப்’ என்ற படத்தில் அறிமுகமான ஜியா கான், ஜூன் 3 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.