Home கலை உலகம் தற்கொலை செய்த நடிகை ஜியாகானின் காதலன் கைதாவாரா?

தற்கொலை செய்த நடிகை ஜியாகானின் காதலன் கைதாவாரா?

700
0
SHARE
Ad

மும்பை, ஜூன் 5- நடிகை ஜியாகான் தற்கொலையில் காதலனான பிரபல நடிகையின் மகன் சிக்குகிறார்.

நிசப்த் இந்திப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுடன் ஜோடியாக நடித்த இளம் நடிகை ஜியாகான். இவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு மும்பை ஜூகு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த ஜியாகான் இருவரும் வெளியில் சென்று இருந்த போது வீட்டில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவில் வீடு திரும்பிய தாயும், சகோதரியும் ஜியாகான் தற்கொலை செய்து இருப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

#TamilSchoolmychoice

பிரபல நட்சத்திர தம்பதிகளான ரிஸ்விகான்-ரபியா அமிமின் மகளான ஜியாகான் செல்வ செழிப்பில் வளர்ந்தவர். அமெரிக்காவில் குடியேறிய பெற்றோருடன் நியூயார்க்கில் வசித்தார். பின்னர் லண்டனில் படித்து வளர்ந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் நபிஷாகான்.

‘நிசப்த்’ படத்தில் ‘ஜியா’ கேரக்டரில் புள்ளிமான் போல் துள்ளி குதித்து வந்து ரசிகர்களை கவர்ந்தார். அந்தப்படத்தின் வெற்றியால் அவரை எல்லோரும் ஜியாகான் என்றே அழைத்தனர். அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. தொடர்ந்து கஜினி படத்தில் அமீர்கானுடனும், ஹவுஸ்புல் படத்தில் அக்ஷய்குமாருடனும் நடித்தார். அவர் 3 படங்களில் மட்டுமே நடித்தாலும் 30 படங்களில் நடித்தது போன்ற புகழ் பெற்றார்.

JIA-KHANதொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்த நிலையில் காதல் என்ற பெயரில் அவரது வாழ்வில் புயல் வீசி வாழ்க்கையையே அழித்துவிட்டது. ஜியாகானுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தாலும் பெரிய அளவான படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்தார். இதனால் படங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கடைசியாக பிரபல நிறுவனத்தின் படம் ஒன்றில் பதிந்திருந்தார் . இந்த படத்தின் படக்காட்சிகளுக்காக ஐதராபாத் சென்று இருந்தார்.

நேற்று முன்தினம் இரவுதான் மும்பை திரும்பினார். வீடு திரும்பிய சில மணி நேரங்களில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையை போலீசார் சோதனையிட்டு ஜியாகான் பயன்படுத்திய கைத்தொலைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றினார்கள். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் கடிதம் எழுதி வைக்கவில்லை. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அவர் தற்கொலை செய்து இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

திடீர் என்று அவர் தற்கொலை முடிவு எடுத்து இருக்கிறார். எனவே எதிர்பாராமல் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் ஜியாகானின் கைத்தொலைப்பேசி, மடிக்கணினியில் உள்ள தகவல்களை ஆராய்ந்தனர். அவரது  கைத்தொலைப்பேசியில் கடைசியாக சூரஜ் பஞ்சோலி பேசியது கண்டு பிடிக்கப்பட்டது. ஜியாகான்  கைத்தொலைப்பேசியில்  இரவு 10.53 மணிக்கு சூரஜ் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும் 30 நிமிடங்கள் பேசி இருக்கிறார்கள். 11.30 மணிக்கு மேல் அவர் தற்கொலை முடிவு எடுத்து இருக்கிறார். அந்த நேரத்தில் தாயும், சகோதரியும் உள்ளே வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியவாறு உயிர் பிரியும் நிலையில் இருந்தார்.

உடனே அருகில் உள்ள மாநகராட்சி  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதற்குள் உயிர் பிரிந்து விட்டது. இதையடுத்து போலீசார் வந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜியாகானும் சூரஜ் பஞ்சோலியும் கடந்த ஒருவருடமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஒன்றாக விருந்து நிகழ்ச்சிகளுக்கும் சென்று வந்தனர். சூரஜ்ஜூம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சூரஜ்ஜின் தந்தை பழம் பெரும் நடிகர் ஆதித்ய பஞ்சோலி. தாயார் பிரபல நடிகை ஜரீனாவசாப். இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்தவர். 1976-ல் நவரத்னம் படத்தில் எம்.ஜி.ஆருடன் 9 கதா நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். சமீபத்தில் ரத்த சரித்திரம் படத்திலும், கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தில் மனநல மருத்துவர் வேடத்திலும் ஜரினா வசாப் நடித்துள்ளார்.

ஜூகு போலீசார் விசாரணைக்காக சூரஜ்ஜை அழைத்து இருந்தனர். அவர் தனது தந்தை ஆதித்ய பஞ்சோலியுடன் போலீஸ் நிலையம் சென்றார். அங்கு சூரஜிடம் கூடுதல் கமிஷனர் விஸ்வாஸ்நக்ரே பட்டேல் விசாரணை நடத்தினார். விசாரணை விவரங்கள் வெளியிடப்படவில்லை. என்றாலும் தற் கொலைக்கு முன் ஜியாகானும், சூரஜூம்  கைதொலைப்பேசியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

ஜியாகானின் வீட்டுக்கு வெளியே பூச்செண்டு ஒன்று விசப்பட்டு கிடந்தது. அது ஜியாகானுக்கு சூரஜ் கொடுத்தது. கைத்தொலைப்பேசியின் மூலம்  ஏற்பட்ட தகராறில் ஜியாகான் ஆவேசம் அடைந்து காதலன் கொடுத்த பூச்செண்டை வீசி எறிந்து விட்டு தற்கொலை முடிவு எடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. ஜியாகான் மடிக்கணினியில்  சூரஜின் படங்கள் பதிவாகி இருந்தது. இருவரும் பேஸ்புக் மூலமும் நட்பு வைத்து இருந்தனர்.

சூரஜின் பிளாக்கில் ஜியாகானின் படங்கள் ஏராளமாக இருந்தன. எனவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அது முறிந்ததால் ஜியாகான் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதையடுத்து சூரஜ்மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளனர். சூரஜ் போலீசாரிடம் கூறும்போது, நாங்கள் நண்பர்களாகத்தான் பழகினோம். அது எங்கள் இருவரது பெற்றோருக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜியாகானுக்கும் இத்தாலியைச் சேர்ந்தவருக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது. இதுவும் காதல் முறிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜியாகானுக்கு வரும்  அழைப்புகளை அவரது தாயார் தான் எடுத்து பேசுவார். படங்கள் ஒப்பந்தம் தொடர்பான முடிவுகளை அவரே எடுப்பார். அவரால் சுயமாக எந்த முடிவும் எடுக்க முடியாததால் மன வருத்தம் அடைந்த நிலையில் இருந்தார் என்று மும்பை சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.