பத்துமலை, ஜூன் 14 – பத்துமலை ஆலயத்தில் ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டத்தை நிறுத்தும் படி செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலய வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள 42.7 மீட்டர் உயர முருகன் சிலை உட்பட, அங்குள்ள பல்வேறு கட்டிடங்கள் யாவும் முன் அனுமதி இன்றி சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ளன என்றும் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது. ஆலய வளாகத்திற்குள் உள்ள சட்டவீரோத கட்டிடங்களின் வரைபடத்தை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து இக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“செலாயாங் நகராண்மைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படாத பல கட்டிடங்கள் பத்துமலை ஆலய வளாகத்திற்குள் எழுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 42.7 மீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலையும் அடங்கும். எனவே இவ்விவகாரத்திற்கு தீர்வு காண மாநில அரசு 6 மாத காலம் அவகாசம் அளித்துள்ளது” என்று செலாயாங் நகராண்மைக் கழகத் தலைவர் முகமட் அசிஸி முகமட் சாயின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு தைப்பூச விழாவின் போது சுமார் 2.5 மில்லியன் ரிங்கிட் செலவில் இந்த 42.7 மீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆலய வளாகத்திற்குள் சுமார் 20 கட்டிடங்களும், சில சிலைகளும் கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் அவை சட்டவிரோதமாக நிறுவப்பட்டவை என்று கூறப்படுகிறது.
“கேபிள் கார் திட்டத்திற்கு தடை உத்தரவு நீங்க வேண்டுமானால், சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப கட்டிடங்களின் வரைபடங்களை ஆலய நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும்” என்று அசிஸி முகமட் சாயின் தெரிவித்துள்ளார்.