Home 13வது பொதுத் தேர்தல் மசீச பதவிகளிலிருந்து தி சியூ கியோங் ராஜினாமா!

மசீச பதவிகளிலிருந்து தி சியூ கியோங் ராஜினாமா!

777
0
SHARE
Ad

Tee-Siew-Kiong-370x290ஜோகூர் பாரு, ஜூன் 15 – ஜோகூர் ஆட்சிக் குழுவில் சுற்றுலா, வர்த்தகம், பயனீட்டாளர் விவகாரத்திற்கு பொறுப்பு வகிக்கும் மசீச கட்சியைச் சேர்ந்த தி சியூ கியோங், தனது ஆயுட்கால உறுப்பினர் அடையாளத்தைத் தவிர மற்ற அனைத்து மசீச பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளார்.

ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராகத் தான் பதவி ஏற்றுக்கொண்டதை, கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரச்சனையாக்குவதால், தான் பதவி விலகுவதாக ஜோகூர் பாருவில் நேற்று செய்தியாளர்களிடம் தி சியு கியோங் தெரிவித்தார்.

மேலும் “மாநில அரசாங்கத்தில் அனைத்து இனங்களின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்பது அரச ஆணை. அதன் படி சீன சமுதாயத்தின் பிரதிநிதியாக இருக்குமாறு என்னை கேட்டுக்கொண்ட  ஜோகூர் சுல்தானின் உத்தரவை, ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் என்னால் மீற முடியாது” என்று சியூ கியோங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர், தலைமை மன்ற உறுப்பினர், மத்திய செயற் குழு  உறுப்பினர், தேர்தல் வழிகாட்டி குழு உறுப்பினர், ஜோகூர் மாநில மசீச  தொடர்புக் குழு உறுப்பினர், ஜோகூர் மசீச தேர்தல் வழிகாட்டிக் குழுத் துணைத்  தலைவர், பொந்தியான் மசீச தொகுதித் தலைவர் ஆகிய பதவிகளை தி சியூ கியோங் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஆவது பொதுத்தேர்தலில் மசீச பின்னடைவைச் சந்தித்ததால், அரசாங்கப் பதவிகள் எதையும் ஏற்கப்போவதில்லை என்று கட்சியின் மத்திய செயற் குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஜோகூர் சுல்தானின் பேச்சை மீற முடியாத தி சியு கியோங் கட்சியின் முடிவையும் மீறி ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

இந்நிலையில் வரும் ஜூன் 17 ஆம் தேதி மசீச கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் கூட்டத்தில் தி சியூ கியோங் கலந்து கொண்டு, தனது நிலை குறித்து விளக்கமளிப்பார் என்று கூறப்படுகிறது.