Home அரசியல் அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து சந்திப்பு!

அடுத்த பிரதமராக துங்கு ரசாலி முயற்சி! நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து சந்திப்பு!

574
0
SHARE
Ad

Tengku Razaleigh கோலாலம்பூர், ஜூன் 13 தேசிய முன்னணி மற்றும் எதிர் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா தொடர்ந்து சந்திப்பு நடத்தி வருவது அடுத்த பிரதமராக வருவதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார் என்பதைக் காட்டுவதாக மலேசியன் இன்சைடர் இணைய செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தலைநகர், அம்பாங் பகுதியிலுள்ள தனது மாளிகை வீட்டில் அவர் தொடர்ந்து சந்திப்புக்களை நடத்தி, ஜூன் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் உண்டா என்பது குறித்து வியூகங்களை வகுத்து வருவதாகவும் அந்த செய்தி கூறுகின்றது.

அவ்வாறு அவர் அடுத்த பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு 112 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். தற்போது எதிர் கட்சிகள் 89 இடங்களைக் கைவசம் வைத்துள்ளன.

அனைத்து எதிர் கட்சி உறுப்பினர்களும் துங்கு ரசாலியோடு கைகோர்த்தால், அவரது சொந்த ஆதரவையும் சேர்த்து 90 உறுப்பினர்களின் ஆதரவு துங்கு ரசாலிக்குக் கிடைக்கும்.

மேற்கொண்டு தேவைப்படும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவரால் திரட்ட முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

மகாதீர் கொள்கையிலிருந்து விலகும் மாற்று தலைமைத்துவம் தேவை!

நாட்டின் இன்றைய சூழ்நிலையில் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கக் கூடிய தகுதி துங்கு ரசாலிக்கு மட்டுமே உண்டு என அவரைச் சந்தித்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த மோசமான தோல்வி காரணமாக நஜிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் அம்னோவில் வலுத்து வருகின்றது.

ஆனால், அம்னோவில் பலர் டான்ஸ்ரீ மொய்தீன் அடுத்த பிரதமராக வருவதை ஆதரிக்கவில்லை.

அதேபோன்று, அன்வார் இப்ராகிம் பிரதமராக வருவதையும், பல மலாய்க்காரர்களும், அம்னோவினரும் விரும்பவில்லை.

இந்நிலையில் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடுநிலை பிரதமர் வேட்பாளராக துங்கு ரசாலி மட்டுமே காணப்படுகின்றார்.

கிளந்தான் அரச பரம்பரையைச் சேர்ந்தவர் என்பதால், மற்ற மாநில சுல்தான்களின் மரியாதையையும், ஆதரவையும், மாமன்னரின் ஒப்புதலையும் கூட அவரால் பெற முடியும்.

அதோடு நஜிப்பும் மொய்தீனும், மகாதீரின் பாரம்பரியத்தை மகாதீரின் கொள்கைகளைத் தொடரும் தலைவர்களாகத்தான் பார்க்கப்படுகின்றார்கள். இந்நிலையில், மகாதீரின் கைப்பிடியிலிருந்து அரசாங்கத்தை மீட்டெடுக்க வேண்டுமானால் துங்கு ரசாலி போன்ற ஒரு தலைவர்தான் பொருத்தமானவர் என்ற கருத்தும் நிலவுகின்றது.

சபா, சரவாக் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு

இதற்கிடையில் அமைச்சரவை நியமனங்களில் அதிருப்தி கொண்டுள்ள சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த திங்கட்கிழமை துங்கு ரசாலியைச் சந்தித்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து வரும் சில வாரங்களில் சபா, சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கப் பதவிகள் வழங்க பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

சபா, சரவாக் மாநிலங்களில் மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 47 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றுள்ளது. தற்போது 133 தொகுதிகளை தேசிய முன்னணி வைத்துள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மூன்றில் ஒரு பகுதியாகும்.

இருப்பினும் 20 அமைச்சர் மற்றும் துணையமைச்சர் பதவிகளை மட்டுமே நஜிப், சபா, சரவாக் மாநிலங்களுக்கு வழங்கியிருக்கின்றார்.

குறிப்பாக சரவாக்கின் எஸ்பிடிபி எனப்படும் கட்சி நான்கு நாடாளுமன்ற தொகுதிகளை கைவசம் வைத்திருந்தாலும், அதற்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.

ஆனாலும், மேற்கு மலேசியாவில் உள்ள ம.இ.காவுக்கு அதன் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் அதிருப்தி கொண்டுள்ள சபா, சரவாக் மாநில தேசிய முன்னணி சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையோடு துங்கு ரசாலியால் அதிரடி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இப்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் விவாதமாகும்.