Home வணிகம்/தொழில் நுட்பம் மேக்சிஸ் நிறுவனத்தில் புதிய தலைமைத்துவ நிர்வாகம்!

மேக்சிஸ் நிறுவனத்தில் புதிய தலைமைத்துவ நிர்வாகம்!

626
0
SHARE
Ad

Maxis-logo-sliderஜூன் 16 நாட்டின் முதன்மையான தொலைத் தொடர்பு நிறுவனமாகத் திகழும் மேக்சிஸ் நிறுவனத்தில் புதிய தலைமைத்துவம் நிர்வாகத்தை மேற்கொள்கின்றது.

#TamilSchoolmychoice

இந்த நிறுவனத்தின் உரிமையாளர், நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரர் டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு தலைமை செயல் நடவடிக்கை அதிகாரிகள் அண்மையில் மேக்சிஸ் நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நசுதின் முகமட் மற்றும் சுரேன் ஜே.அமரசேகரா ஆகியோரே அந்த இருவராவர்.

மேக்சிஸ் நிறுவனத்தின் லாபம் கடந்த சரிந்ததைத் தொடர்ந்தே இந்த நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பத்திரிக்கைத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டில் 1.86 பில்லியன் ரிங்கிட் லாபத்தை அடைந்த மேக்சிஸ், அதற்கு முந்தைய ஆண்டில் 2.53 (2530 மில்லியன்) ரிங்கிட் லாபத்தை மட்டுமே ஈட்டியது.

இந்த சரிவினால் சுதாரித்துக கொண்ட இயக்குநர் வாரியம் அதிரடி மாற்றங்களை எடுத்துள்ளது.

வர்த்தக சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டிகள், கூடி வரும் செலவினங்கள் ஆகியவற்றின் காரணமாகவும், பயனீட்டாளர்களை அதிகரிக்கும் அல்லது அவர்களைச் சென்றடையும் சேவைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் சுணக்கம் ஏற்பட்டதால்தான் இலாபத்தின் சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட உயர்நிலைப் பதவி வகிப்பாளர்கள் அதிகமாக இருப்பதாலும், நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன என்றும் மற்றொரு வர்த்தக ஆய்வு தெரிவித்துள்ளது.

போட்டி நிறுவனங்கள்

Celcom-logo-sliderமற்றொரு போட்டி நிறுவனமான செல்கோம் (Celcom) இதே போன்றதொரு நிலைமையை முன்பு சந்தித்தது. ஆனால் டத்தோஸ்ரீ ஷசாலி ரம்லி நிர்வாகத் தலைமையை ஏற்றுக் கொண்ட பின்னர் அதன் நடவடிக்கைகள் மாறி தற்போது பயனீட்டாளர்களின் நலன்களைக் குறிக்கோளாகக் கொண்டே அது செயல்படுகின்றது.

மேக்சிசை விட அதிகமான ஊழியர்களை – 4,000 பேரை – கொண்டிருந்தாலும் செல்கோம் கடந்த ஆண்டு 2.2 பில்லியன் ரிங்கிட் இலாபத்தை அடைந்தது. மேக்சிஸ் 1.86 பில்லியன் இலாபம் மட்டுமே ஈட்ட முடிந்தது.

மேக்சிஸ் 3,500 ஊழியர்களைக் கொண்டிருக்கின்றது.

மற்றொரு போட்டி நிறுவனமாக டிஜி.காம் பெர்ஹாட் (DiGi.Com Bhd) சுமார் 2,000 ஊழியர்களைக் கொண்டிருக்கின்றது. அதன் இலாபம் 1.2 பில்லியன் ரிங்கிட்டாகும்.

வருமானத்தைப் பொறுத்தவரையில் செல்கோமை விட மேக்சிஸ் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளது.

7.7 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை செல்கோம் பெற்ற வேளையில், மேக்சிஸ் 8.9 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது. டிஜியோ 6.36 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியது.

கைத்தொலைபேசி சேவையை வைத்திருக்கும் பயனீட்டாளர் எண்ணிக்கையிலும் மேக்சிஸ் முதலிடம் வகிக்கிறது. முடிந்த ஆண்டில் 14.9 மில்லியன் வாடிக்கையாளர்களை மேக்சிஸ் கொண்டிருந்தது.

செல்கோம் 12.07 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த வேளையில் டிஜி 10.49 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தது.

புதிய நிர்வாகப் பொறுப்பாளர்கள்

இத்தகைய சூழ்நிலையில் நான்கு வர்த்தக பிரிவுகளாக மேக்சிஸ் நிறுவன அமைப்பு தற்போது புதிய தலைமைத்துவத்தின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் பிரிவுக்கு சாந்தி ஜூஸ்னிதா ஜோஹாரி, வர்த்தகப் பிரிவுக்கு துஷ்யானந்தன் வைத்தியநாதன், விற்பனைப் பிரிவுக்கு தான் லே ஹான், சேவைப் பிரிவுக்கு குகன் திருநாவுக்கரசு என தலைமைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மேக்சிஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, நிறுவனம் அதிக இலாபத்தை அடையவும் மேலும் சிறப்பாக செயல்படவும் இந்த புதிய நிர்வாகம் பாடுபடும்.