பினாங்கு, ஜூன் 17 – இந்த மாத இறுதி வாக்கில் தங்க நகைகளுக்கான வேலைப்பாடுகளுக்கான சம்பளங்கள் கூடும் என்பதால், அதனைத் தொடர்ந்து தங்க நகைகளின் விலைகளும் சுமார் 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட அடிப்படை சம்பள நிர்ணயத்தினால் நகை வேலைப்பாடுகள் செய்பவர்களுக்கான சம்பளங்களும் உயர்வு கண்டுள்ளன என்பதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகின்றது என பினாங்கு தங்க நகை வணிகர்களுக்கான சங்கத்தின் ஆலோசகர் ஜேசன் கோர் கூறியிருக்கின்றார்.
இந்த தகவலை ஸ்டார் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
சம்பள விகிதங்கள் கூடுவதால், நகைகளின் விலைகளும் 2 அல்லது 3 சதவீதம் வரை உயர்வு காணும் என்றும் அவர் ஜேசன் கோர் கூறியிருக்கின்றார்.
10 கிராம் அளவுள்ள ஒரு தங்க நாணயத்தின் வேலைப்பாடுக்கான கூலி தற்போது 200 ரிங்கிட்டாக இருக்கின்றது என்றும் தற்போது தங்க நகைகளுக்கான வேலைப்பாடுகள் செய்யும் கைத்திறன் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்.
தங்க நகைகளுக்கான உற்பத்தித் தொழிலுக்கான முதலீடு அதிகமாக இருக்கின்ற அதே வேளையில், தற்கால தலைமுறையினர் இந்த நகை வேலைப்பாடு தொழிலில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் வெளிநாட்டவர்கள்தான் அதிகமாக இந்த தொழிலுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றார்கள்.
2012ஆம் ஆண்டில் மலேசியாவின் தங்க நகைகளுக்கான ஏற்றுமதியின் மதிப்பு 4.63 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது. இது இந்த நடப்பாண்டில் 10 முதல் 20 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மலேசியாவின் தங்க நகைகளை அதிகமாக வாங்கும் நாடுகளாக, யுனைட் அராப் எமிரேட்ஸ் (United Arab Emirates), ஹாங்காங், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் ஆகியவை திகழ்கின்றன.
உள்ளூர் சந்தையைப் பொறுத்தவரையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், தங்க நகைகளின் சில்லறை விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜேசன் கோர் குறிப்பிட்டார்.
உள்ளூர் சந்தைகளில் 22-காரட் தரமுள்ள தங்க நகைகள் மீதான நாட்டம் அதிகரித்துள்ள வேளையில், வெளிநாடுகளிலோ, 9 காரட் தரமுள்ள தங்க நகைகளுக்கான நாட்டம் அதிகரித்துள்ளது.
பினாங்கு தங்க நகை வணிகர் சங்கம் சுமார் 600 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் சுமார் 10 சதவீதத்தினர் தங்க நகை உற்பத்தியாளர்கள் ஆவர். அவர்கள் நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் தங்க நகைகளில் 90 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.