Home கலை உலகம் திரை விமர்சனம்: தில்லுமுல்லு (2013)

திரை விமர்சனம்: தில்லுமுல்லு (2013)

877
0
SHARE
Ad

9thillumulluஜூன் 18 – 1981 ல் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நகைச்சவை நடிப்பில் வெளிவந்த தில்லுமுல்லு படத்தின் நவீன மறுபதிப்பு தான் தில்லுமுல்லு(2013). ரஜினிகாந்த் இடத்தில் மிர்ச்சி “சிவா” ஜீரணிக்க சற்று கடினமாக இருந்தாலும் கதாபாத்திரத்தை ஓரளவு ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

வேலைவெட்டி எதுவும் இல்லாமல் தங்கை மற்றும் மாமா இளவரசுவுடன் சென்னையில் வசித்துவரும் சிவாவுக்கு, தனது அப்பா விட்டுச் சென்ற ஒரே ஒரு வீட்டையும் வங்கிக்கு தாரைவார்த்துக் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் சிவா கடன்காரனாகிறார். வேலைக்கு போவது என்றாலே வேப்பங்காய் போல் கசக்கும் சிவாவுக்கு, கடனை அடைக்க வேலைக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை.

இந்நிலையில் அவருடைய மாமா இளவரசு, தனது நண்பரான பிரகாஷ்ராஜின் மினரல் வாட்டர் நிறுவனத்தில் சிவாவை சேர்த்துவிட முடிவெடுக்கிறார். ஆனால் மிகவும் கண்டிப்பானவரான பிரகாஷ்ராஜுக்கு சிபாரிசு என்றாலே பிடிக்காது. எனவே முருக பக்தரான பிரகாஷ்ராஜை அவரது வழியிலேயே சென்று கவிழ்க்க இளவரசுவும், சிவாவும் திட்டம் போடுகிறார்கள்.

#TamilSchoolmychoice

பிரகாஷ்ராஜ் நடத்தும் நேர்காணலுக்கு பக்தி பழம் போல் கதர் ஆடை அணிந்து வருவது, தனது பசுபதி என்ற பெயருக்கு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளைக் காரணம் காட்டுவது போன்ற காட்சிகள் மட்டுமே பழைய தில்லுமுல்லுவை நினைவுபடுத்துகின்றன.

பிரகாஷ்ராஜின் நிறுவனத்தில் நாற்பதாயிரம் சம்பளத்துடன் கூடிய வேலையில் அமரும் சிவா, முதலாளியின் நம்பிக்கைக்கு உரியவராய் மாறுகிறார். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக, தனது அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக நண்பர்களை அலுவலகத்திற்கு தகவல் சொல்ல வைத்து, இல்லாத அம்மாவை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் பார்க்க சென்றுவிடுகிறார்.

பழைய தில்லு முல்லுவில் முதலாளி தேங்காய் சீனிவாசனிடம், பொய் சொல்லி கால்பந்தாட்டம் பார்க்கச் சென்று ரஜினி மாட்டிக் கொள்வது போல், இங்கு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் கூத்தடித்து, பிரகாஷ்ராஜிடம் மாட்டிக் கொள்கிறார் கதாநாயகன் சிவா.தண்ணியடித்து விட்டு சிவா போடும் ஆட்டத்தை தனது கைப்பேசியில் ஒளிப்பதிவும் செய்துவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அதன் பிறகு சிவா, தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் போடும் இரட்டை வேடக் கூத்து தான் மொத்த படமும்.

மீசையுள்ள சந்திரன், மீசையில்லாத இந்திரன் என இரு வேடங்களில் ரஜினி ஏமாற்றுவது போல், முருக பக்தர் பசுபதி, பூனைக் கண் கங்குலி கந்தன் என்று இரு வேடங்களில் ஏமாற்றுகிறார் சிவா. இறுதியில் சிவா தான் செய்த தில்லுமுல்லுகளை பிரகாஷ்ராஜிடம் எடுத்துக்கூறினாரா? இஷா தல்வாரை கரம்பிடித்தாரா என்பது படத்தின் முடிவு.

சிவாவின் தங்கையுடனான தனது காதலைப் பற்றி சிவாவிடம் கூற ‘பரோட்டா’ சூரி படும் பாடு பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. “இப்படி தான் குண்டப்பா விஸ்வநாத்தும், கவாஸ்கரும் நல்ல பிரண்ட்ஸாம் மச்சான், அதனால கவாஸ்கர் தன்னோட தங்கச்சிய குண்டப்பா விஸ்வாநாத்துக்கே கட்டி வச்சுட்டாராம்” என்று சூரி சூட்சமமாக கூறும் பல வசனங்கள் சிரிப்பு வெடிகளுக்கு உத்தரவாதம்.

முரட்டு வில்லன் ‘முத்துப்பாண்டி’ யாக நடித்த பிரகாஷ்ராஜ், நகைச்சுவையிலும் தன்னால் கலக்க முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். சிவா வீட்டில் வேலைபார்க்கும் குப்பத்து மனுஷி கோவை சரளாவை, சிவாவின் அம்மா ‘முருக அடிமை’ என நம்பி அவர் காலில் விழுவதாகட்டும், “நான் தோற்கலாம், நீ தோற்கலாம், முருகன் தோற்கக்கூடாது” என்று வசனம் பேசுவதாகட்டும் கலக்கியிருக்கிறார் மனிதர். images

சிவாவின் மாமாவாக வரும் இளவரசு, பிரகாஷ் ராஜிடம் மானேஜராக பணிபுரியும் மனோபாலா, நடிகராக வரும் சத்யன் ஆகியோரும் படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பக்கபலம் சேர்த்துள்ளனர். இது தவிர படத்தின் இறுதிக்காட்சிகளில் மாப்பிள்ளைக் கோலத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சந்தானம்.

படத்தில் இத்தனை நகைச்சுவைக் கதாப்பாத்திரங்கள், வசனங்கள், காட்சி அமைப்புகள் இருந்தும் கூட, பல காட்சிகளில் தில்லு முல்லு (1981) வைத் தொட முடியாமல் திணறுகிறது தில்லு முல்லு(2013) என்பது மறுக்க முடியாத உண்மை.

குறிப்பாக தன்னுடன் வரமறுக்கும் காதலி மாதவியிடம், இந்திரன், சந்திரன் இருவரும் ஒருவர் தான் என்று ரஜினி உண்மையை வெளிப்படுத்துவது,திடீரென வீட்டிற்கு வரும் முதலாளியின் முன் இந்திரனாகவும், பிறகு வேஷம் மாற்றி வந்து சந்திரனாகவும் ரஜினி பேசுவது போன்ற பல காட்சிகளில் இருந்த சுவாரஸ்யங்கள், புதிய தில்லு முல்லுவில் இல்லை.

எம்.எஸ்.வியும், யுவனும் திரையில் ஒன்றாகத் தோன்றும் தொடக்கப் பாடல் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்குப் பிறகான பாடல்களுக்கு, இசை யுவன் சங்கர் ராஜாவா? என்னாச்சு யுவன்? என்று கேட்கும் அளவிற்கு சுமார் தான்.”ராகங்கள் பதினாறு” மறுஒலிப்பதிவு மட்டும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியப்பெருமாள் சந்திரனை (தில்லுமுல்லு 1981) மறந்தால் பசுபதியை (தில்லுமுல்லு 2013) ரசிக்கலாம்.

இந்த படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணையத் தொடர்பின் வழி காணலாம்.

 – பீனிக்ஸ்தாசன்