கோலாலம்பூர், ஜூன் 18- நாட்டிலுள்ள 523 தமிழ்ப்பள்ளிகளையும் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக நீதிமன்றம் பிரகடனப் படுத்த வேண்டும் என்று மனோகரன், உதயகுமார் ஆகியோர் பிரதமர், துணைப் பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக தொடுத்த வழக்கை திரும்பப் பெற்று கொண்டனர்.
கோத்தா ஆலாம் ஷா தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.மனோகரன், ஹிண்ட்ராஃப் தலைவர் பி.உதயகுமார் ஆகியோர் இவ்வழக்கை தொடர விரும்பவில்லை என்று அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகமது சைட் அகமது ஜுபேர் உயர் நீதிமன்ற நீதிபதி வி.டி. சிங்கத்திடம் தெரிவித்தார்.
இதற்கு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எப்பெண்டி நஜிலா அப்துல்லா மறுப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து அவரின் மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.
ஏன் இருவரும் இவ்வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டீர்கள் என மனோகரனிடம் கேட்டபோது, அவர் அது குறித்து விளக்கமளிக்க மறுத்து விட்டார். உதயகுமார் தற்சமயம் தேச நிந்தனைக் குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மனோகரன் மற்றும் உதயகுமார் தொடுத்த வழக்கிற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதால்,அவ்வழக்கை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த 14.1.2013 ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரதமர், துணைப்பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு, அவ்விருவருக்கும் போதிய ஆதரங்கள் இல்லாத்தால், தாம் இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக, கடந்த 20.6.2012 ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி வி.டி சிங்கம் தீர்ப்பளித்திருந்தார்.
தமிழ்ப் பள்ளிகள் குறித்து தொடுத்த வழக்கு
இந்நாட்டிலுள்ள ஒவ்வொரு தமிழ்ப் பள்ளிகளையும், 4.05 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட வேண்டும் என்பதுடன் அவற்றுக்கு நியாயமான முறையில் நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி, மனோகரனும், உதயகுமாரும் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.
ஏழை மாணவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடுதியுடன் கூடிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும். அதேவேளையில் கிளந்தான், திரங்கானு, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது ஒரு தமிழ் இடைநிலைப் பள்ளி கட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவ்விருவரும் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத் தவிர்த்து, யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் ‘7 ஏ’க்கள் பெற்ற 1,191 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கி பயிலும் வகையில் பிரேசர் மலையில் தமிழ்ப் பள்ளியை மாரா அறிவியல் இளநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு அரசாங்கம் 200 மில்லியன் மானியமாக ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவ்விருவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.