இருப்பினும் வழக்கறிஞர் மன்றத்தின் அந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் கேவியசும் அவரது மனைவியும் வழக்கு தொடுத்தனர்.
அந்த வழக்கில் தோல்வியுற்றாலும், பின்னர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த கேவியசும் அவரது மனைவியும் அந்த வழக்கிலும் தோல்வி கண்டனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர்.
கேவியசின் மேல் முறையீட்டை விசாரித்த ஐந்த நீதிபதிகளைக் கொண்ட குழு, அவரது மேல் முறையீட்டை நிராகரித்து, வழக்கறிஞர் மன்றத்தின் முடிவை மறு உறுதிப்படுத்தியது. நீதிபதிகள் குழுவிற்கு துன் அரிபின் சக்காரியா தலைமை தாங்கினார்.
நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கேவியசும் அவரது மனைவியும் நடந்து கொண்டது வழக்கறிஞர் தொழிலுக்கு முறைகேடானது எனக் குறிப்பிட்டனர்.
2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துடமை ஒன்றின் உடன்படிக்கையை கையாண்ட போது அதில் முறைதவறி நடந்து கொண்டார்கள் என்பதற்காக அவர்கள் மீதான விசாரணை தொடங்கப்பட்டு அவர்கள் இருவருக்கும் தலா 5,000 ரிங்கிட் அபராதத்தை வழக்கறிஞர் மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 2005ஆம் ஆண்டில் விதித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பே இறுதியானது, இதற்குப் பிறகு மேல் முறையீட்டுக்கான வாய்ப்பில்லை என்பதால், இந்த தீர்ப்பால் கேவியசின் கட்சித் தலைவர் பதவிக்கு சட்டரீதியாக ஆபத்து நேருமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் பாசீர் பெடாமார் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாக கேவியஸ் போட்டியிட்டு ஜசெகவின் வி.ஆர்.டெரன்ஸ் நாயுடுவிடம் 13,037 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.