கோலாலம்பூர், ஜூன் 24 – புகை மூட்டத்திற்குக் காரணமான நிறுவனங்கள் மீது, அவை மலேசிய நிறுவனங்களாக இருந்தாலும், இந்தோனேசிய அரசாங்கம் விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
“இது இயற்கையாக ஏற்பட்ட அழிவு அல்ல. இவற்றின் பின்னணில் மனிதர்கள் இருக்கிறார்கள்” என்று இன்று நாடாளுமன்ற கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் சுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும், இப்புகை மூட்டத்திற்கு மலேசிய நிறுவனங்கள் தான் காரணம் என்று ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட சுப்ரமணியம், அப்படி ஒரு வேளை ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
“புகைமூட்டம் காரணமாக மூவார் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளான போர்டிக்சன், கிள்ளான் துறைமுகம் ஆகிய இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அதோடு குவாந்தான், கெமாமன் ஆகிய பகுதிகள் முன்பை விட தற்போது மோசமாக உள்ளது. எனவே அரசாங்கம் புகையிலிருந்து மக்களைப் பாதுகாக்க தற்காப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது” என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
பொதுமக்கள் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும், அப்படி போக நேர்ந்தால் சுவாசப் பாதுகாப்பு மூடிகளை அணிந்து செல்ல வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களும், சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சுப்ரமணியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.