கோலாலம்பூர், ஜூன் 25 – இன்று 13 வது நாடாளுமன்றத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பேரரசர் யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல் ஹாலிம், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற 13 வது பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என்று தனது தொடக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.
“வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் மலேசியாவை அதிக வருமானமுள்ள நாடாக மாற்றுவதற்கு, நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்” என்றும் பேரரசர் தெரிவித்தார்.
மேலும் தனது அரசு எப்போதும் இஸ்லாம் மதத்தை நிலைநிறுத்தும் என்றும், மலேசியர்கள் அனைவரும் தங்களது பலவந்தப் போக்கை கைவிட்டு அமைதியுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு மலேசியர்களுக்குப் பயனளிக்கும் வகையில், அரசாங்கம் தனது தேசிய உருமாற்றுத் திட்டத்தை செயல்படுத்தும் என்று தான் நம்புவதாகவும் பேரரசர் தெரிவித்தார்.
“அரசாங்கம் செயல்படுத்திய பல திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலையையும், சமூக நிலையையும், அரசியல் நிலையையும் உயர்த்தியுள்ளது. மேலும் அரசாங்கம் தனது பொறுப்புகள்,ஒருமைப்பாடு, நல்லாட்சி மற்றும் சட்டதிட்டங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று பேரரசர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.