கோலாலம்பூர், ஜூன் 26- எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ம.இ.காவின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில், நடப்புத் தலைவர் ஜி.பழனிவேலை எதிர்த்து போட்டியிடும்படி, கட்சியின் துணைத் தலைவரான டாக்டர் சுப்ராவிற்கு நெருக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எந்த பிரச்சனையுமின்றி கட்சியின் துணைத்தலைவராகவும், சுகாதாரத் துறை அமைச்சராகவும் நீடித்து இருக்கக்கூடிய அருமையான வாய்ப்பை சுப்ரா பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், பழனிவேல் இன்னும் ஒரு தவணை தான் பதவியில் இருப்பேன் என்று கூறியிருப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு கட்சியின் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு சுப்ராவிற்கு இருக்கிறது. எனவே, அவர் பழனிக்கு ஆதரவு தெரிவித்து துணைத்தலைவராக நீடிக்க விரும்புவதாக அவருக்கு நெருக்கமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சுப்ராவை தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட வைக்க ஒரு குழுவினர் தீவிரமாக பாடுப்பட்டு வருகின்றனர்.
டாக்டர் சுப்ரா, தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லையென்றால், பழனிவேலை எதிர்த்துப் போட்டியிட டத்தோ சரவணனை நிறுத்த இந்த குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.
அவ்வாறு நடக்கும் தேர்தலில் ஒருவேளை சரவணன் வென்றுவிட்டால், சரவணனின் கீழ் துணைத் தலைவராகப் பணியாற்றும் நிலை சுப்ராவிற்கு ஏற்படும்.
ஒருவேளை இந்த குழுவினரின் நெருக்குதலுக்கு அடிபணிந்து சுப்ரா, தேசிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தால், தனது சுகாதாரத் துறை அமைச்சு பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்படலாம்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி தவிக்கும் சுப்ரா, தகுந்த முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.