Home 13வது பொதுத் தேர்தல் சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தப் போகும் கோல பெசுட் சட்டமன்ற இடைத் தேர்தல்

சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தப் போகும் கோல பெசுட் சட்டமன்ற இடைத் தேர்தல்

419
0
SHARE
Ad

Kuala-Besut-location-slderஜூன் 26 – 13வது பொதுத் தேர்தலின் சூடு தணியும் முன்னே, நாட்டில் ஒரு முக்கியமான சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் நடக்கப் போகின்றது.

#TamilSchoolmychoice

கோல பெசுட் என்ற சட்டமன்றத் தொகுதி எங்கே இருக்கிறது என ஆவலோடும், ஆர்வத்தோடும் இனி நாட்டு மக்கள் ஆராயப் போகின்றார்கள்.

திரெங்கானு மாநிலத்தில் கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினராக தேசிய முன்னணி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஹ்மான் மொக்தார் (படம்) காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் தற்போது தேசிய முன்னணி திரெங்கானு மாநிலத்தில் 17 தொகுதிகளை வைத்திருக்க, மக்கள் கூட்டணி 15 தொகுதிகளைப் பெற்றிருக்கின்றது.

காலமானது தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் என்பதால், நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டால், அதன் மூலம் திரெங்கானு மாநிலத்தில் இரண்டு அரசியல் அணிகளும் தலா 16 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று சரிசமமான பலத்தோடு திகழும்.

இதனால் அரசியல் நெருக்கடியும் உருவாகும். ஒட்டு மொத்த மாநிலத்திற்கே மறு தேர்தல் நடத்தக் கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

எனவே, இந்த தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள தேசிய முன்னணி கடுமையாகப் பாடுபட வேண்டிய நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இல்லாவிட்டால் திரெங்கானு மாநிலத்தையே அது இழக்கக் கூடும்.

அதே வேளையில், மக்கள் கூட்டணியும், குறிப்பாக பாஸ் கட்சி கோல பெசுட் சட்டமன்றத் தொகுதியைக் கைப்பற்றுவதற்கு கடுமையாகப் போராட்டம் நடத்தும்.

மக்கள் கூட்டணித் தலைவர்களும் அணிவகுத்து இங்கே பிரச்சாரத்திற்கென களமிறங்கப் போகின்றார்கள்.

அடுத்து வரும் சில வாரங்களுக்கு, நாட்டின் ஒட்டு மொத்த கவனமும் கோல பெசுட் பக்கம்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

காரணம் திரெங்கானு மாநிலத்தின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் இடைத் தேர்தல் இது!