கான்பெர்ரா, ஜூன் 27- ஆஸ்திரேலிய நாட்டில் ஜூலியா கில்லார்டு என்னும் தொழிலாளர் கட்சி பெண் தலைவர் பிரதமர் பதவி வகித்து வந்தார்.
அங்கு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் கில்லார்டின் செல்வாக்கு சரிந்து வருகிறது. அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் ஆளும் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஆளும் கட்சி அதிரடியாக பிரதமரை மாற்றி உள்ளது. இது தொடர்பாக இன்று நடந்த ஆளும் கட்சி வாக்கெடுப்பில் கெவின் ரூத் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 57 வாக்குகளும், கில்லார்டுக்கு 45 வாக்குகளும் கிடைத்தன.
கெவின் ரூத், கில்லார்டால் ஓரம் கட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கெவின் ரூத் புதிய பிரதமர் ஆகியுள்ள நிலையில், அவர் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.