ஜம்மு, ஜூன் 27- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ஜதேந்திர சிங் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கிஷ்த்வார் பகுதிக்குச் சென்று நீர் மின் உற்பத்தி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்தப் பயணத்தின்போதாவது நிவாரணம் அறிவிக்கப்படும் என அப்பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எவ்வித நிவாரணமும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
புதிதாக தொடங்கப்படும் நீர் மின் உற்பத்தி மையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் கிஷ்த்வார் மாவட்டத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்வர் ஒமர் அப்துல்லா உறுதி அளிக்காததும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.