கான்பெரா, ஜூலை 2- ஆஸ்திரேலியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு குறைந்ததையடுத்து, பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஜூலியா கில்லார்டை எதிர்த்து போட்டியிட்ட அவரது பரம எதிரியாக இருந்த கெவின் ரூத் (வயது 55) வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூத், அரசு மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். துணை பிரதமராக அந்தோணி அல்பானிசே, நிதி மந்திரியாக கிறிஸ் போவென் ஆகியோரும் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றனர்.
இந்நிலையில் நாட்டின் முதல் பெண் பிரதமரை பதவியில் இருந்து வெளியேற்றிவிட்டு, தலைமை பொறுப்புக்கு வந்த ரூத், தனது மந்திரிசபையில் 6 பெண்களை நியமித்து, அவர்களுக்கு முக்கிய துறைகளை வழங்கியிருக்கிறார். புதிய மந்திரிகள் இன்று பதவியேற்றனர்.
ஆஸ்திரேலிய வரலாற்றில் எந்த மந்திரிசபையிலும் இல்லாத வகையில் இப்போது 6 பெண்களை நியமித்திருப்பதாக ரூத் தெரிவித்தார். முற்றிலும் தகுதி அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பெண் மந்திரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், பாலின அடிப்படையில் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது 20 பேர் கொண்ட மந்திரி சபையில், விக்டோரியா செனட்டர் ஜெசிந்தா கோலின்ஸ், கேத்தரின் கிங், ஜூலி கோலின்ஸ், பென்னி வாங், டான்யா பிளிபெர்செக், ஜென்னி மேக்லின் ஆகிய உள்ளிட்ட 11 பெண் மந்திரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு முன்பு 30 பேர் கொண்ட ஜுலியா கில்லார்டின் மந்திரிசபையில் 9 பெண் மந்திரிகளே இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.