கோலாலம்பூர், ஜூன் 28 – கோல பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் ரஹ்மான் மொஹ்தார் மறைந்த மறுநாளே, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் வெளியிட்டுள்ள அறிக்கை, தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்துல் ரஹ்மானை இழந்து சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குடும்பத்தினருக்கு, அன்வாரின் ‘உணர்வுகளற்ற’ மற்றும் ‘பொறுமையில்லாத’ அவசரப் பேச்சு, மேலும் மன வருத்தத்தையே ஏற்படுத்தும் என்று கெமாமன் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் ஷாபெரி சீக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஏன் அவர் ஒரு சில நாட்கள் காத்திருந்து, பிறகு அது போன்ற அறிக்கையை வெளியிடக்கூடாது. தங்களது அன்புக்குரியவரை இழந்து வாடும் அக்குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் அல்லவா கூறியிருக்க வேண்டும்” என்று ஷாபெரி சீக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், அப்துல் ரஹ்மான் இரண்டு முறை தனது கோல பெசுட் தொகுதியை தக்க வைத்துள்ளார் என்றும், ஆகவே தேசிய முன்னணிக்கு அந்த தொகுதியைக் கைப்பற்றுவதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் கோல பெசுட் தொகுதியில் போட்டியிட்ட ரஹ்மான் மொஹ்தார், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நாப்ஸியா இஸ்மாயிலை விட 2,434 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
55 வயதான அவர் கடந்த புதன்கிழமை அன்று நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இதனால் கோல பெசுட் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அகமட் மஸ்லான் இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள கருத்தில், “இடைத்தேர்தலில் கோல பெசுட் தொகுதியை இழப்பது தேசிய முன்னணிக்கு நல்லதல்ல. காரணம் ஒருவேளை பாஸ் வெற்றி பெற்றால் திரங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணியும், மக்கள் கூட்டணியும் சமமான தொகுதிகளைக் கொண்டிருக்கும். இது போன்று வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை. இதனால் திரங்கானுவில் பல அரசியல் நெருக்கடிகள் ஏற்படும்” என்று புத்ரா ஜெயாவில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.