புத்ராஜெயா, ஏப்ரல் 16 – அடுத்த இரு மாதங்களில் அகண்ட அலைக்கற்றை (Broadband) சேவைக்கான கட்டணங்களைக் குறைக்க மலேசியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒப்புக் கொண்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள கட்டண விகிதங்கள் சுமார் 10 முதல் 57 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஷாபெரி சீக் கூறினார்.
“இனி ‘3G-HSPA’ நெட்வொர்க் இணைப்பில், 1 ஜிபிக்கான அகண்ட அலைக்கற்றை சேவையை கைபேசியில் பெற 25 ரிங்கிட் மட்டுமே ஆகும்,” என்றார் அஹ்மட் ஷாபெரி.
1 கிகா பைட்டுக்கு 25 ரிங்கிட் அடிப்படைக் கட்டணம் என்ற அடிப்படையிலான சேவையை அனைத்து நிறுவனங்களும் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
‘Fixed line’ அகண்ட அலைக்கற்றை சேவைக்காண கட்டணம் 38 ரிங்கிட்டில் இருந்து தொடங்கும் என்றும், இந்த இணைப்பு 1 Mbps வேகத்தில் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“புதிய கட்டணங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். கட்டுப்படியாகக் கூடிய இணைய சேவைக் கட்டணங்கள் காரணமாக நாட்டில் அதிகமானோர் இணைய வசதியைப் பெறுவர். இதன் மூலம் டிஜிட்டல் நாடாக மலேசியாவை உருவாக்கும் நமது முயற்சி வேகம் பெறும்.
“குறைந்த கட்டணத்தில் தரமான இணைய சேவை என்பது வெளிநாட்டு முதலீட்டாளர்களை
நம் பக்கம் ஈர்க்கும். மேலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த கைகொடுக்கும்,” என்றார் அஹ்மட் ஷாபெரி.
தங்களது கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதன் வழி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது இணைய சேவை தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட அவர், இதற்கு முதலீட்டை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்
என்றார்.