Home அரசியல் ரமணனின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி நியமனத்தால் சர்ச்சை!

ரமணனின் கூட்டரசுப் பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி நியமனத்தால் சர்ச்சை!

582
0
SHARE
Ad

BANTUANஜூன் 30 கூட்டரசுப் பிரதேச அமைச்சர் துங்கு அட்னான் தனது சிறப்பு அதிகாரியாக ம.இ.காவைச் சேர்ந்த டத்தோ ரமணனை நியமித்திருப்பது ம.இ.கா வட்டாரங்களில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியர் அல்லாத அமைச்சர் ஒருவரின் சிறப்பு அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். எனவே, இந்த நியமனம் வாழ்த்தி, வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

அதிலும் குறிப்பாக, கூட்டரசுப் பிரதேச அமைச்சு என்பது கோலாலம்பூர் மாநகரை நிர்வாகம் செய்யும் அமைச்சு என்பதால், இங்கு இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் ஏராளமாக இருக்கின்றன. எனவே, இந்த அமைச்சில், அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பல விவகாரங்களை நேரடியாகக் கண்காணிக்கவும், கையாளவும் வழிவகுக்கும்.

ம.இ.கா தலைவர்கள் எதிர்ப்பு

இருப்பினும் ம.இ.காவின் முக்கிய பதவியில் இருக்கும் ரமணன், ம.இ.கா தலைமைத்துவத்தின் மூலமாக நியமிக்கப்படாமல், நேரடியாக அமைச்சரால் நியமிக்கப்பட்டிருப்பதால்  ம.இ.காவில் தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.

நேற்றைய ஃபிரி மலேசியா டுடே செய்தி இணையத் தளத்தில் பெயர் குறிப்பிடாத ம.இ.கா தொகுதித் தலைவர் ஒருவர், ரமணனின் இந்த நியமனத்தின் மூலம் துங்கு அட்னான் ம.இ.கா விவகாரங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியில் திறமை வாய்ந்த மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் போது   மாநிலத் தலைவர் டத்தோ சரவணன், தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் இவ்வாறு ரமணன் நியமிக்கப்பட்டிருப்பது நல்லதொரு முன்னுதாரணமல்ல என்றும் அந்த தொகுதித் தலைவர் சாடியுள்ளார்.

டான்ஸ்ரீ நிஜார் தற்காப்பு வாதம்

இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை விடுத்திருக்கும் ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும், ம.இ.கா. ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவருமான டான்ஸ்ரீ நிஜார் ரமணனின் நியமனத்தைத் தற்காத்து பேசியிருக்கின்றார்.

இந்த நியமனம் அமைச்சரின் சிறப்பு அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் யாரும் இது பற்றி கேள்வி எழுப்பக் கூடாது என்று கூறியுள்ள நிஜார் இது இந்திய சமுதாயத்திற்கும், ம.இ.காவுக்கும் கிடைத்துள்ள கௌரவம் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, இதுபோன்ற நியமனங்களில் ம.இ.கா தலைவர்கள் தலையிடுவது அவர்களின் முதிர்ச்சியின்மையையே காட்டுவதாகவும்  நிஜார் கண்டித்திருக்கின்றார்.