கொழும்பு, ஜூலை 1-இலங்கையின் வடகிழக்கு மாகாணப் பகுதி மற்றும் போலீஸ் நிர்வாகத்திற்கு அதிகாரங்கள் வழங்குவது குறித்த 13-வது சட்டத்திருத்தத்தை இந்தியாவின் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனேவும் 1987-ம் ஆண்டு கொண்டு வந்தனர்.
அதன் மீது ஜே.வி.பி. கட்சி கொண்டு வந்த வழக்கை தொடர்ந்து அந்த 13-வது சட்டத்திருத்தம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தமிழர்களின் பகுதிகளான வடகிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
அதற்கு முன்னரே அந்த சட்ட அதிகாரத்தை குறைக்கும் வேலையில் இலங்கை ராஜபக்சா அரசு இறங்கியுள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அதிபர் ராஜபக்சாவின் இளைய சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச ஜூலை 4-ம் தேதி இந்தியா வருகிறார்.
அவர் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ரவி சங்கர் மேனன் ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வரும் இந்தியா, இந்த ராஜ தந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கும் இந்த 13-வது சட்டத்திருத்தம் குறித்து வரும் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் இலங்கை பாராளுமன்ற தேர்வு கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.