ஜூலை 1-நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக தாய் தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும் வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.
கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளைவிட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.
650-க்கும் அதிகமான மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும்.
உத்தரகாண்ட் வெள்ளத்தில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நமது ராணுவத்தினர் திறமையாக செயல்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அந்த பேரழிவு 3, 4 ஆண்டுகளுக்கு நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று விட்டது என்கின்றனர். இதற்காக எங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். இவ்வாறு சூர்யா பேசினார்.
சிவகுமார் மகள் பிருந்தா இறைவணக்கம் பாடினார். அகரம் பவுண்டேசன் செயலாளர் ஜெயஸ்ரீ, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பங்கேற்றனர்.