ஜூலை 1- நடிகர் சூர்யாவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இணையும் மூன்றாவது படம் ‘துருவநட்சத்திரம்’.
இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனே தயாரித்து, இயக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சிம்ரன், பார்த்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படத்தின் தொழில்நுட்ப வல்லுநர் முதல் இதர நடிகர் நடிகைகளை சுலபமாக தேர்வு செய்த கௌதம் நாயகியை தேர்வு செய்வதில் மட்டும் குழம்பிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகியாக முதலில் த்ரிஷாதான் முதலில் ஒப்பந்தமானார். ஆனால், படத்தில் வரும் பள்ளி மாணவி கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார்.
எனவே அவருக்குப் பதிலாக அமலாபால் பொருத்தமாக இருப்பார் என சூர்யா அமலாபாலை சிபாரிசு செய்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனையடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார் என்கிற செய்திகள் வெளியாயின.
ஆனால், அமலாபாலும் இந்த கதாபாத்திரத்திற்கு ஒத்துவரவில்லை என்று தெரிகிறது. அதன்பிறகு ‘கடல்’ படத்தில் நடித்த ராதாவின் இரண்டாவது மகள் துளசி நடிப்பதாக செய்தி வெளியானது.
அவர் 10-வகுப்புதான் முடித்திருப்பதால் பொருத்தமாக இருப்பார் என்று பார்த்தார்கள். ஆனால் சூர்யா இதற்கு சம்மதிக்கவில்லை. முன்னணி நடிகைதான் நடிக்கவேண்டும் என்று அடம்பிடித்தாராம்.
ஒருவருக்கு பிடித்தால் மற்றொருவருக்கு பிடிக்கவில்லை என நாயகி தேடல் இழுத்துக் கொண்டே சென்றது. இறுதியில் ஒருவழியாக சமந்தாவை இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சமந்தாவின் நடிப்பில் திருப்தி ஏற்பட்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், படப்பிடிப்பு நடக்கும்போதுதான் நாயகி யார் என்பதில் முடிவு தெரியும்.