ஜூலை 1 –காவல் துறையின் தடுப்புக் காவலில் இருந்தபோது மரணமுற்ற குகனின் வழக்கில் மகனை இழந்த தாய்க்கும் குகனின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட நஷ்ட ஈட்டிற்கு எதிராக அரசாங்கமே மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ளது.
அநியாயமாக, இளம் வயதில் மரணத்தைத் தழுவிய குகனின் குடும்பத்தினருக்கு இந்த நஷ்ட ஈட்டுத் தொகை சற்றே ஆறுதலைத் தந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதனையும் விட்டு விடாமல் அரசாங்கம் மேல் முறையீடு செய்திருப்பது இந்திய சமுதாயத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்திலும் எதிரொலி
இந்த விவகாரம் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் விவாதமாக வெடித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கேள்வியெழுப்ப முனைந்த போது, நாடாளுமன்றத்தின துணை சபாநாயகர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்.
ஜூன் 26ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து அரசாங்கம் மேல் முறையீடு செய்வதற்கு 30 நாட்கள் கால அவகாசம் இருப்பதால் அதற்குள் இது பற்றி விவாதிப்பது நீதிமன்ற அவமதிப்புக்ககு ஒப்பாகும் என்று கூறி துணை சபாநாயகர் இஸ்மாயில் முகமட் சைட் எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தடுத்து நிறுத்தி விட்டார்.
மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் கலந்து கொண்டு பேசிய பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சுரேந்திரன், தடுப்புக் காவலில் நிகழும் மரணங்களைத் தடுத்து நிறுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறை கூறியதோடு, குகனின் மரணம் தொடர்பான சம்பவங்களையும் எடுத்துக் கூறினார்.
ஆனால் மேற்கொண்டு இது பற்றி பேசுவது நீதிமன்ற வழக்கில் தலையிடுவதற்கு ஒப்பாகும் என துணை சபாநாயகர் இஸ்மாயில் சைட் கூறினார்.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா துணை சபாநாயகரின் நிலைப்பாட்டை மறுத்ததோடு, அரசாங்கம் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யும் என துணை சபாநாயகரே முடிவு செய்யக் கூடாது என்று கூறினார்.
இந்த வழக்கில் குகனின் குடும்பத்தாருக்கு 801,700 ரிங்கிட் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது.
இருப்பினும், நீதிபதி வி.டி.சிங்கத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த வழக்கில் மேல் முறையீடு செய்யும் என உள்துறை அமைச்சர் டத்தோ சாஹிட் ஹாமிடி கோடி காட்டியுள்ளார்.