ஜூலை 13 – காவல் துறையினரின் தடுப்புக் காவலில் இருந்தபோது கடுமையாக தாக்கப்பட்டு மரணமடைந்த ஏ.குகனின் மரணத்திற்கு இழப்பீட்டு தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என கடந்த மாதம் நீதிபதி வி.டி.சிங்கம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அரசாங்கம் மேல் முறையீடு செய்துள்ளது.
குகன் குடும்பத்தினரின் வழக்கறிஞரான என்.சுரேந்திரன் (படம்) இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். இன்றைய தேதியிட்டு மேல் முறையீட்டுக்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் தனக்கும் சார்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சுரேந்திரன் கூறினார்.
தடுப்புக் காவலில் அகால மரணமடைந்த தங்களின் இள வயது மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தின் இழப்பீடு இருக்கும் என அனைவரும் கருதியிருந்த வேளையில், அரசாங்கத்தின் சார்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த மேல்முறையீடு இந்திய சமுதாயத்தில் பரவலான அதிருப்தி எழுந்திருக்கின்றது.
இந்த மேல்முறையீடு தேவையற்றது, நியாயமற்றது என வழக்கறிஞர் சுரேந்திரனும் கூறியிருக்கின்றார். இந்த மேல் முறையீட்டினால், குகனின் தாயார் இந்திரா நல்லதம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மேலும் சுமையும், தொல்லைகளும்தான் ஏற்படும் என்றும் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் மேலும் கூறியிருக்கின்றார்.
உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹாமிடி முன்பு கூறியிருந்தபடியே இந்த மேல்முறையீட்டை கொண்டு வந்திருக்கின்றார்.
காவல் துறை மீதான சுதந்திர விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என நாடு முழுக்க வலுத்து வரும் கோரிக்கைகளைத் தொடர்ந்து, அரசியல் காரணங்களுக்காக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதாகவும் சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.
குகன் மரணத்திற்காக, 801,700 ரிங்கிட் நஷ்ட ஈடாகவும், 50,000 ரிங்கிட் செலவுத் தொகையாகவும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.